| ADDED : நவ 23, 2025 01:56 AM
சென்னை: மின் சாதன பழுது, பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் சாதனங்களை, பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள், பகுதி செயற்பொறியாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி உள்ளது. ஒவ்வொரு அலுவலகத் துக்கும், ஒரு நிதியாண்டில் குறிப்பிட்ட மதிப்புடைய மின் சாதனங்களை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பு குறைவாக உள்ளதால், மின் சாதனங்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு, பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், கொள்முதல் பணிக்கான டெண்டர் மதிப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, செயற்பொறியாளர்கள் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக, 50 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யலாம்; இதுவரை இது 25 லட்சம் ரூபாயாக இருந்தது. கட்டுமான பணிக்கான டெண்டர் மதிப்பு, 50 லட்சம் ரூபாயில் இருந்து, 1 கோடி ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு ஒரு நிதியாண்டிற்கு, 2 கோடி ரூபாயாக உள்ள டெண்டர் மதிப்பு, 3 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணி டெண்டர் மதிப்பு சென்னை, காஞ்சிபுரத்துக்கு, 3 கோடி ரூபாயில் இருந்து, 6 கோடி ரூபாயாகவும்; மற்ற மாவட்டங்களுக்கு, 3 கோடி ரூபாயில் இருந்து, 5 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மண்டல தலைமை பொறியாளர்களின் மின் சாதன கொள்முதல் டெண்டர் மதிப்பு, 8 கோடி ரூபாயில் இருந்து, 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.