உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக்கு விலை நிர்ணயம்: விரைவில் புதிய அரசாணை பிறப்பிக்க முடிவு

எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக்கு விலை நிர்ணயம்: விரைவில் புதிய அரசாணை பிறப்பிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'எம்.சாண்ட், பி. சாண்ட்' மற்றும் கருங்கல் ஜல்லிக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக, புதிய அரசாணையை கனிம வளத்துறை பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சில ஆண்டுகளாக, எம்.சாண்ட் மற்றும் கருங்கல் ஜல்லி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதுமட்டுமின்றி, குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், தங்கள் விருப்பப்படி இவற்றின் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றனர்.

வரி உயர்வு

தமிழகத்தில், 3,000க் கும் மேற்பட்ட இடங்களில், கருங்கல் குவாரிகள், தனியார் நிலங்களில் செயல்படுகின்றன. கனிம வளத்தை வெட்டி எடுப்பது தொடர்பாக, அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் உயர்த்தப்பட்டது, வரி உயர்வு போன்றவையே, விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகின்றன.இந்நிலையில், கட்டணம் மற்றும் வரி உயர்வை எதிர்த்து, குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் தன்னிச்சையாக, எம். சாண்ட், ஜல்லி விலையை யூனிட்டுக்கு, 1,000 ரூபாய் வரை உயர்த்தினர்.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அப்போதைய கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு நடத்தியதும், விலையை குறைக்க குவாரி உரிமையாளர்கள் சம்மதித்தனர். ஆனாலும், பெரும்பாலான பகுதிகளில், அதிக விலைக்கே எம்.சாண்ட், ஜல்லி விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், கனிம வளத்துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ள ரகுபதியை, தமிழக மணல், எம். சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளனத்தின் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக, புதிய அரசாணை வெளியிடப்படும் என, அமைச்சர் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, சம்மேளனத்தின் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது:மணல், எம்.சாண்ட், ஜல்லி விவகாரத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து, அமைச்சர் ரகுபதியிடம் விரிவாக எடுத்துரைத்தோம். குறிப்பாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் கனிமவளங்களை பறிமுதல் செய்யும் போது, லாரி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

போலி நடைச்சீட்டு

இதில், அனுமதியின்றி கனிம வளங்களை வெட்டி எடுத்தது, போலியான நடை சீட்டுகள் தயாரித்து பயன்படுத்தியது, வரி ஏய்ப்பு செய்தது, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது போன்றவற்றில் குவாரி உரிமையாளர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், அவர்கள் வழக்கில் சேர்க்கப்படுவதில்லை. எனவே, இனி வரும் காலங்களில், இது போன்ற வழக்குகளில், குவாரி உரிமையாளர்களை முதல் நபராக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் ரகுபதி உறுதி அளித்தார்.அத்துடன், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக, புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
மே 19, 2025 04:00

கமிஷன் அடிப்படையில் விலை உயர்த்தப்படும். மின்கட்டணம் கூட விரைவில் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. அதை வைத்து மாநிலம் உலகிலேயே அதிக வரி வருமானமீட்டும் மாநிலமாகவும் வாய்ப்பு உண்டு. பிகு: டாஸ்மாக்குக்கு ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிக்க அடுத்த கூட்டத்தொடரில் மசோதா போட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை