| ADDED : ஜன 31, 2024 04:13 AM
மதுரை : வரும் பிப்ரவரியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்காக, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.தமிழகத்தில் எப்படியாவது வலுவாக காலுான்றும் வகையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 234 தொகுதிகளுக்கும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாத யாத்திரை செல்கிறார். தற்போது வேலுார் மாவட்ட தொகுதிகளில் யாத்திரைநடக்கிறது.பிரதமர் நரேந்திர மோடியும் அடுத்தடுத்து தமிழகத்தை குறிவைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த ஒரு மாதத்தில் திருச்சி விமான நிலையத்தில் புதிய டெர்மினல் திறப்பு விழா, அதைத் தொடர்ந்து ராமர் கோவில் திறப்புக்கு முன்னதாக சென்னை வந்த பிரதமர், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து அயோத்தி சென்றார்.அடுத்ததாக பிப்ரவரி மத்தியில், அவர் மீண்டும் தமிழகம் வருகிறார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 200வது தொகுதியாகவேலுார் பகுதியில் சுற்றுப்பயணத்தை முடிக்கிறார். இதையொட்டி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க பிப்., 11ல் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வருகிறார்.அதையடுத்து சென்னை பகுதியில் மீதமுள்ள தொகுதிகளில் யாத்திரையில் ஈடுபடும் அண்ணாமலை பிப்., 18ல் யாத்திரையை நிறைவு செய்கிறார். பிப்., 18 அல்லது 24ல் திருப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழா நடக்கவுள்ளது.அதில் பங்கேற்க பிரதமர் மோடி வர உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.