| ADDED : பிப் 21, 2024 06:35 AM
மதுரை : தமிழகத்தில், 5,700க்கும் மேற்பட்ட உயர்நிலை, 8,100க்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் ஹைடெக் லேப்கள் உள்ளன.மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு, ஆசிரியர்களுக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் பயிற்சிகள் போன்றவை, இந்த லேப்களில் தற்போது நடத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு இதுவரை இருந்த மின் கட்டணம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் ஹைடெக் லேப் வசதி இல்லாத போது வழங்கப்பட்ட மின் கட்டணத்தையே அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதனால் தலைமையாசிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:மின் கட்டணத்தை உயர், மேல்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் முன்கூட்டியே செலுத்தி, அரசு நிதி ஒதுக்கியவுடன் அதில் இருந்து பெற்றுக்கொள்வோம். லேப் வருவதற்கு முன் ஒரு பள்ளிக்கு 3,000 - 5,000 ரூபாயாக இருந்த மின் கட்டணம் தற்போது 50,000 ரூபாய்க்கும் மேல் அதிகரித்து விட்டது.ஆண்டுதோறும் இரண்டு கட்டமாக மின் கட்டணத்தை அரசு வழங்குகிறது. கடைசியாக ஒதுக்கிய நிதி பல ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளது. ஆனால் அப்பணத்தை தலைமையாசிரியர்கள் செலுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.அரசு பள்ளிக்கு ஆகும் மின்செலவை அரசே செலுத்த முன்வர வேண்டும். இவ்வாறு கூறினர்.
மதுரையில் 3 நாளே அவகாசம்
மதுரையில் அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மின் கட்டணத் தொகை பிப்., 20ல் தான் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டது. 23க்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெறப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஜூனில் வந்த நிதியை இவ்வளவு தாமதமாக பள்ளிகளுக்கு விடுவித்து விட்டு மூன்று நாட்கள் அவகாசம் என அதிகாரிகள் உத்தரவை ஏற்கமுடியாது என தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.