| ADDED : நவ 25, 2025 05:47 AM
சம்பள பில்லில் 3 சதவீத அகவிலைப்படி நிலுவையை கணக்கீடு செய்வதில் குளறுபடி ஏற்படுவதால், நவம்பர் மாத சம்பள பில் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அரசு ஊழியர், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பில்லை ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மை (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) அமைப்பில் ஆன்லைனில் சமர்ப்பித்து வருகின்றனர். இந்த மாத சம்பள பில்லில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கான 4 மாத நிலுவைத் தொகையையும் சேர்த்து கணக்கீடு செய்யப்படுகிறது. இதில், சில பிரச்னைகள் எழுந்துள்ளன. அக்டோபரில் ஈட்டிய விடுப்பு சரண் செய்தவர்களுக்கான, அகவிலைப்படி நிலுவைத் தொகை,தேர்வு, சிறப்பு நிலை அலுவலர்களுக்கான அகவிலைப்படி நிலுவையை கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சிக்கல் ஏற்படும் போது இணையதளத்தில் ஊழியர்களே திருத்தம் செய்யும் வாய்ப்பு தரப்பட்டிருந்தது. தற்போது ஆட்டோமேட்டிக் வாய்ப்பு மட்டுமே உள்ளது. இதனால் நவம்பர் மாத சம்பள பில்லை அந்தந்த கருவூலகங்களில் சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கருவூலகத்துறை அதிகாரி கூறியதாவது: இதற்கென தனியாக அலுவலர்களை நியமித்து, பிரச்னைகளுக்கு தீர்வு பெற்று வருகிறோம். அதே நேரம் சம்பள பில் தயாரிக்கும் அலுவலர்கள், சம்பள பில்லில் ஏற்படும் பிழைகளை குறிப்பிட்டு, அந்தந்த சம்பளம் வழங்கும் கருவூலகத்தில் ஒப்படைத்தால் நிவர்த்தி செய்து தர உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.
'அரியர்' கணக்கீட்டில் குழப்பம்
வந்தால் தொடர்பு கொள்ளலாம் இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள், 'அரியர் தொகை தானாக (ஆட்டோமேட்டிக்) கணக்கிடும் வகையில், 'சிஸ்டம் அப்டேட்' செய்யப்பட்டுள்ளது. பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. இன்னும் சிக்கல் நீடித்தால், சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டால் வழிகாட்டப்படும்' என தெரிவித்தனர். - நமது நிருபர் -