அரசு மருத்துவமனையில் டீன் அனுமதி பெறாமல் கழிப்பறை, லிப்ட் பராமரிப்பு பணி செய்ய தடை
சென்னை:அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் பராமரிப்பு பணிகளில், பொறியாளர்கள் தன்னிச்சையாக செயல்பட, பொதுப்பணி துறையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணி துறையின் மருத்துவ பணிகள் பிரிவு வாயிலாக, 36 அரசு மருத்துவமனைகள், 62 அரசு மருத்துவ கல்லுாரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள். ஒரு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனை, மூன்று பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டடங்கள் பராமரிக்கப்படுகின்றன. இதற்கான நிதியை, மக்கள் நல்வாழ்வு துறை வழங்கி வருகிறது. புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் கட்டுமான பணிகள் நடப்பதால், கடந்தாண்டு 1,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நெருக்கடி
இதில், 100 கோடி ரூபாய்க்கும் குறைவான நிதி மட்டுமே, பராமரிப்பு பணிக்கு பொதுப்பணி துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. குறைவான நிதியில் மருத்துவமனைகளில் உள்ள லிப்ட், குளிர்சாதன பெட்டி, மின் விசிறிகள், மின் விளக்குகள், கழிப்பறை சாதனங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன. கொடுக்கும் நிதியில், பராமரிப்பு பணிகளை பொதுப்பணி துறையினர் செய்தாலும், மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிஉள்ளது. இது, பொதுப்பணி துறை உயர் அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. தடை விதிப்பு
எனவே, மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகளில், பராமரிப்பு பணிகளை தன்னிச்சையாக மேற்கொள்ள பொதுப்பணி துறை பொறியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மருத்துவமனைகளை பராமரிப்பதற்கு ஒவ்வொரு மருத்துவமனைக்கும் உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கொடுக்கும் குறைந்த நிதியில், முறையாக பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. அங்கு வரும் மக்கள் கூட்டத்திற்கு, இது போதுமான அளவில் இல்லாததால், அடிப்படை கட்டமைப்புகள் அடிக்கடி சேதமாகின்றன. லிப்ட், ஜெனரேட்டர் உள்ளிட்டவை அடிக்கடி பழுதாகின்றன. இதுபற்றி எடுத்துக் கூறினாலும், மக்கள் நல்வாழ்வு துறையினர் கண்டுகொள்வதாக இல்லை. எனவே, இனி வரும் நாட்களில் மருத்துவமனைகளின் டீன்கள் அனுமதி பெற்ற பின்னரே, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பணிகளை முடித்த பின், டீன்களை அழைத்து சென்று காட்டி, அவர்களிடம் கையொப்பம் பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.