உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குவிகிறது சொத்து வரி பெயர் மாற்ற விண்ணப்பம்
சென்னை:'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், ஊரகப் பகுதிகளில், சொத்துவரி பெயர் மாற்றம் கோரி, ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால், இணையதளம் மேம்படுத்தப்படாததால், அரசு அறிவித்தபடி 45 நாட்களில் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.தமிழக அரசின், 13 சேவை துறைகள் வாயிலாக வழங்கப்படும் ஆவணங்கள் மற்றும் சலுகைகள், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் அரசால் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நகர்ப்புறங்களில், 43 சேவைகள், கிராமப்புறங்களில், 46 சேவைகள் வழங்கப்படுகின்றன.தமிழகம் முழுதும், 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில், வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதை பூர்த்தி செய்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ் மற்றும் சலுகைகளை பெற, உரிய ஆவணங்களுடன் முகாம் நடக்கும் நாளில் வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, 45 நாட்களில் தீர்வு வழங்கப்படும்.இத்திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஊரக பகுதிகளில் நடக்கும் முகாம்களில், சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. ஏற்கனவே, பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்து, பல மாதங்களாகியும் கிடைக்காத நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் விண்ணப்பித்தாலாவது தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.இதுகுறித்து, ஊரகப் பகுதி மக்கள் கூறியதாவது:சென்னை போன்ற நகரப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில், சொத்து வாங்குவது, விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது. வீடு, நிலம் என சொத்து வாங்கியவர்கள், சொத்துவரி ஆவணங்களில், தங்கள் பெயரை மாற்றக்கோரி, உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், பெயர் மாற்றம் செய்ய பல மாதங்களாகின்றன. தற்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், விண்ணப்பம் அளித்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும் என மனு அளித்துள்ளோம். ஆனால் அதிகாரிகள், சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்கான இணையதளம் மேம்படுத்தப்படவில்லை. இதனால், காலதாமதம் ஏற்படுகிறது என்று கூறி அலைக்கழிக்கின்றனர். இது, அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் சூழல் உள்ளது. எனவே, விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.ஊரக உள்ளாட்சி மற்றும் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சொத்துவரி பெயர் மாற்றத்தில் உள்ள சிக்கல்களுக்கு, விரைவில் தீர்வு காணப்படும். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.