நீலகிரி: நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த காங்., எம்.பி., ராகுலின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை மேற்கொண்டனர். நேற்று ஊட்டி வந்த அமைச்சர் உதயநிதியின் ஹெலிகாப்டரும் சோதனை செய்யப்பட்டது.தமிழகத்தல் ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாள் (ஏப்.,17) உடன் முடியவுள்ள நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் எல்.முருகனை எதிர்த்து தற்போதைய திமுக எம்.பி.,யான ஆ.ராசா போட்டியிடுகிறார். ராசாவை ஆதரித்து பிரசாரம் செய்ய இன்று (ஏப்.,15) காங்கிரஸ் எம்.பி., ராகுல் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.அப்போது, ராகுல் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் பிரசாரத்தை முடித்துவிட்டு தான் போட்டியிடும் கேரளா மாநிலம் வயநாடுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்ல உள்ளார். நேற்று, ஊட்டிக்கு, தேர்தல் பிரசாரத்திற்காக அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.ஜனநாயகத்தை காக்க போராட்டம்
பின்னர் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை. ஒரே நாடு ஒரே தலைவர் என தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் மோடி. பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை. இந்தியாவில் பல மொழிகள் உள்ளன; இந்தியாவின் இயல்பை பிரதமர் மோடி புரிந்துக்கொள்ளவில்லை. ஜனநாயகத்தை காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.மாணவியருடன் 'செல்பி'
வயநாடு செல்லும் வழியில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தாளூர் வந்த ராகுல், கல்லூரி மாணவர்களுடன் 'செல்பி' எடுத்துக்கொண்டார்.