உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 13 பிரிவு அதிகாரிகள், ஊழியர்களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை

13 பிரிவு அதிகாரிகள், ஊழியர்களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே, நின்றிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்து குறித்து, தெற்கு ரயில்வேயை சேர்ந்த, 13 பிரிவு அலுவலர்களிடம், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, நேற்று விசாரணை நடத்தினார்.கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, பீஹார் மாநிலம் தர்பங்காவுக்கு, 1,800 பயணியருடன் நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், 100 கி.மீ., வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

கிளைப்பாதை

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும் போது, நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில், தொழில்நுட்ப பிரச்னையால், பிரதான பாதைக்கு பதிலாக, 'லுாப் லைன்' எனப்படும், கிளை பாதையில் மாறிச் சென்றது. அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், விரைவு ரயிலின், 12 பெட்டிகள் வரை தடம் புரண்டன. இந்த விபத்தில், அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில், 19 பேர் படுகாயம் அடைந்தனர். மீதமுள்ள பயணியர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அங்கிருந்து மின்சார ரயில்களில் சென்ட்ரல் அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்தப் பயணியர் தர்பங்கா அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்த பகுதியில், சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தண்டவாளத்தில் சிதறி கிடக்கும் பெட்டிகளை அகற்றும் பணி நடக்கிறது. அது முடிந்ததும், தண்டவாளம் சீரமைப்பு பணி துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையில், விபத்து பகுதியில், தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, நேற்று பகலில் ஆய்வு செய்தார். தண்டவாளம், சிக்னல் பகுதி, 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்' அமைப்பு பகுதி, கட்டுப்பாட்டு அறை உட்பட சிக்னல் மற்றும் இயக்கக பிரிவுகளில் ஆய்வு நடத்தினார். ஆய்வுக்கு பின் அவர் கூறுகையில், “இந்த சம்பவம் குறித்து விசாரணையை துவக்கி இருக்கிறோம். “விசாரணைக்கு பின்னரே, விபத்துக்கான காரணம் குறித்து முழு விபரம் தெரியவரும்,” என்றார். 'கவச் கருவி இருந்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் தானே' என்ற கேள்விக்கு, “கவச் கருவிக்கும் இந்த விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்றார்.

விசாரணை

இந்த விபத்து தொடர்பாக, ரயில் ஓட்டுனர்கள், சிக்னல் தொழில்நுட்பம், நிலைய மேலாளர்கள், கட்டுப்பாட்டு அறை உட்பட, 13 பிரிவுகளின் பணியாளர்கள், அதிகாரிகளை, சென்ட்ரல் அருகே உள்ள தலைமை அலுவலகத்துக்கு அழைத்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர், நேற்று மதியம் 2:00 மணி அளவில் விசாரணையை துவக்கினார்.பாக்மதி ரயிலின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர், ரயில் நிலைய மேலாளர், சரக்கு ரயில் ஓட்டுனர், இந்த மார்க்கத்தின் போக்குவரத்து ஆய்வாளர், மூத்த பொறியாளர், கேட்கீப்பர், டிக்கெட் பரிசோதகர், 'ஏசி' பெட்டி ஊழியர் உட்பட 13 பிரிவு அதிகாரிகள், ஊழியர்களிடம், ஆணையர் சவுத்ரி விசாரணை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை