அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:'அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திவிட்டு, பா.ம.க., மீது பழிபோட முயற்சிகள் நடப்பதால், தமிழகம் முழுதும் உள்ள அவரது சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் ஜாதி கலவரத்தைத் துாண்டும் நோக்கத்துடன், கடலுார் மாவட்டத்தில் அம்பேத்கரின் சிலைகளை உடைக்க, பா.ம.க., திட்டமிட்டுள்ளதாக, காவல் துறையினர் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் இன்றுள்ள அரசியல் கட்சிகளில், அம்பேக்தரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட முதல் கட்சி பா.ம.க., தான்.தமிழகம் முழுதும் நுாற்றுக்கும் மேற்பட்ட அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்த, தலித் இயக்கம் இல்லாத ஒரே கட்சி பா.ம.க., தான். தமிழகத்தில் அம்பேத்கரின் சிலையை வைத்துள்ள ஒரே தலைவரின் இல்லம், என் வீடு தான்.கடந்த 1998 லோக்சபா தேர்தலுக்கு முன், திண்டிவனத்தில் அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க.,வினரே செருப்பு மாலை அணிவித்து, பா.ம.க., மீது பழி போட்டனர். அதற்கு காரணமாக இருந்த தி.மு.க., அமைச்சரை, அன்றைய முதல்வர் கருணாநிதி கண்டித்தார் என்பது வரலாறு.அப்போது தி.மு.க. கையாண்ட மலிவான உத்தியை, இப்போது, கடலுார் மாவட்ட காவல்துறை கையாள்வது வருத்தம் அளிக்கிறது. கடந்த காலங்களில் செய்யப்பட்டது போல, அம்பேத்கர் சிலையை அவமதித்துவிட்டு, அந்தப் பழியை பா.ம.க.,வினர் மீது போட தயங்க மாட்டார்கள்.எனவே, கடலுார் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுதும் அம்பேத்கரின் சிலைகளுக்கு நடுநிலையான காவல் துறை உயரதிகாரிகளின் கண்காணிப்பில், பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.