2024ல் 15,000 பேருக்கு மட்டுமே அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை:கடந்த 2024ல், 15,000 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைத்துள்ளதாக, தி.மு.க., அரசுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் 2024ல், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, 10,701 பேர், சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக, 3339 பேர், மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக, 946 பேர் என, மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே, அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு கோரி, 60 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், ஆண்டுக்கு 15,000 பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது, இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளை ஒருபோதும் நனவாக்காது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அரசு துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐந்தாண்டுகளில், ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே, அரசு வேலைகளை தி.மு.க., அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு மன்னிக்கவே முடியாத துரோகத்தை, தமிழக அரசு செய்திருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.