மேலும் செய்திகள்
மாயமாகும் அரசு நிலங்கள் வருவாய்த் துறை அலட்சியம்
19-Jul-2025
சென்னை:ராமேஸ்வரம் விமான நிலையத்துக்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து இடங்கள் தமிழக அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் ஒன்று கூட, ராமநாத சுவாமி கோவில் அருகில் இல்லை. தென்னை மரங்கள் அதிகம் இருப்பது போன்றவற்றால், இடங்களை இறுதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், கூடுதலாக இரு இடங்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் வழிபட, உலகம் முழுதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அம்மாவட்டத்தில் உள்ள பாம்பன் பாலம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் போன்றவை, முக்கிய சுற்றுலா தலங்களாக திகழ்கின்றன. பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ராமேஸ்வரம் வந்து சென்ற பின், அங்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோர், மதுரை அல்லது துாத்துக்குடிக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து கார், பஸ் என, சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் செல்கின்றனர். இதனால் பயண நேரம், செலவு அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானது. துாத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட காரணங்களால், தென் மாவட்டங்களில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, ராமேஸ்வரம் விமான நிலையத்தை, பிரமாண்ட சரக்கு முனைய வசதிகளுடன், 2,000 ஏக்கரில் அமைக்கும்படி, அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், 500 - 700 ஏக்கரில், ஐந்து இடங்களை, ராமேஸ்வரம் விமான நிலையத்துக்காக, 'டிட்கோ' நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இதில் ஒன்று கூட ராமநாதசுவாமி கோவில் அருகில் இல்லை. இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இலங்கை அருகில் உள்ள ராமேஸ்வரம், அதிக பாதுகாப்பான பகுதியாக உள்ளது. இங்கு தென்னை மரங்கள் அதிகம் இருப்பது, இடம் சமச்சீராக இல்லாமல், முக்கோண வடிவில் இருப்பது போன்ற காரணங்களால், விமான நிலையத்திற்கு தேர்வான இடங்களை இறுதி செய்ய முடியவில்லை. எனவே, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஐந்து இடங்களுடன், கூடுதலாக இரு இடங்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவை, அரசுக்கு அனுப்பப்படும். அரசு தேர்வு செய்யும் மூன்று இடங்கள், விமான நிலைய ஆணையத்திடம் வழங்கப்பட்டு, சாத்தியக்கூறு ஆய்வுக்கு அனுப்பப்படும். இந்த பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
19-Jul-2025