| ADDED : செப் 22, 2025 03:03 PM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் விற்பனை உதவியாளர் பலத்த காயமடைந்தார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புஞ்சை கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் அரசின் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் சித்ரா,40, என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். சித்ரா தனக்கு உதவியாக புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த சவுரிராஜன்,62, என்பவரை நியமித்துள்ளார். இன்று ரேஷன் கடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தபோது, மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் அங்கு பொருட்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்த சவுரிராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, சித்ரா மற்றும் அருகில் இருந்தவர்கள் சவுரிராஜன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைக்கான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு சொற்ப ஆண்டுகளே ஆகும் நிலையில், மேற்கூரை பெயர்ந்து விழுந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்பனார் கோவில் போலீசார் மற்றும் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் அனிதா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.