உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொல்லிமலை நீர் மின் திட்டம் தாமதம் கூடுதலாக கடன் வழங்க ஆர்.இ.சி., மறுப்பு

கொல்லிமலை நீர் மின் திட்டம் தாமதம் கூடுதலாக கடன் வழங்க ஆர்.இ.சி., மறுப்பு

சென்னை:கொல்லிமலை நீர் மின் திட்ட பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அத்திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட கடனில், 24 கோடி ரூபாயையும், கூடுதலாக தேவைப்படும், 151 கோடி ரூபாயையும் கடனாக வழங்க, ஆர்.இ.சி., நிறுவனம் மறுத்து விட்டது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியின் தண்ணீரை பயன் படுத்தி, நீர் மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது. இதற்காக, நீரூற்று பிரியும் இடங்களில் தடுப்பணைகள் கட்டி, சுரங்க வழித்தடம் வாயிலாக தண்ணீரை, திருச்சி அருகேயுள்ள புளியஞ்சோலைக்கு கொண்டு வந்து, மின் உற்பத்தி திட்டமிடப்பட்டு உள்ளது. ரூ.405 கோடி புளியஞ்சோலையில், 20 மெகாவாட் திறனில் கொல்லிமலை நீர் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இத்திட்ட பணிக்கான ஒப்புதல் கடிதம், 2016 செப்டம்பரில், தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. திட்டச் செலவு, 405 கோடி ரூபாய். இதில், மத்திய அரசின் ஆர்.இ.சி., நிறுவனம், 324 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இதற்கான ஆண்டு வட்டி, 10.50 சதவீதம் - 11.05 சதவீதம் என்றளவில் உள்ளது. மீதி, மின் வாரியத்தின் சொந்த நிதி. கொல்லிமலை மின் திட்டத்தில், 2021 ஏப்ரலில் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. இதுவரை, 75 சதவீத பணி மட்டுமே முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணியை முடிக்க கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதனால் திட்டச்செலவு, 595 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனவே, 151 கோடி ரூபாய் கூடுதலாக கடன் வழங்குமாறு, ஆர்.இ.சி., நிறுவனத்திடம், மின் வாரியம் கேட்டுள்ளது. அதை வழங்க, ஆர்.இ.சி., மறுத்து விட்டது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொல்லிமலை நீர் மின் திட்டத்திற்கு சிறு அணைகள், செயற்கை கால்வாய் அமைக்க, அரசின் மற்ற துறைகளில் இருந்து, நிலம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் ஒப்பந்த நிறுவனத்திடம், 2023ல் தான் நிலம் வழங்கப்பட்டது. இதனால் தான், மின் திட்டம் தாமதமானது. கூடுதல் நிதியும் இல்லை இதில், ஆர்.இ.சி., ஏற்கனவே, 324 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்பு கொண்டதில், இன்னும், 24 கோடி ரூபாய் தர வேண்டும். இந்தக்கடன், இந்தாண்டு ஜூன் மாதத்திற்குள் திட்ட பணியை முடித்து இருந்தால் கிடைத்திருக்கும். திட்ட பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், 24 கோடி ரூபாயை தர, ஆர்.இ.சி., மறுத்து விட்டது. இது தவிர, மின் திட்டத்தின் மீதமுள்ள பணிக்கு தேவைப்படும் கூடுதல் நிதியில், 151 கோடி ரூபாயும் கடனாக கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை