| ADDED : செப் 17, 2011 12:15 AM
சிவகங்கை: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதில் ஏற்படும் முறைகேட்டை தவிர்க்க, வாடிக்கையாளர் போட்டோ, கைரேகை, கண் கருவிழி அமைப்பு மற்றும் குடும்ப உறுப்பினர் போட்டோக்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு, அனைவரும் உயர்கல்வி பெறும் நோக்கில், வங்கிகளில் கல்விக்கடன் வழங்க உத்தரவிட்டது. 2009ல் கல்விக்கடன் பெற்றவர்களின் வட்டியை தள்ளுபடி செய்தது. அதே போன்று வட்டி தள்ளுபடி தொடரும் என்ற நோக்கத்தில், மாணவர்கள் வங்கிகளில் கடன் பெறுவதாக புகார் எழுந்தது. அதே போன்று மாணவர்கள் பெயர்களைச் சொல்லி, வங்கி ஊழியர்கள் சிலர் போலியாக ஆவணம் தயாரித்து, கடன் பெறுவது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்க்க, வங்கிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அடையாள அட்டை: ஒவ்வொரு வங்கிக்கும் கல்வி மற்றும் பிற கடன்களை பெற வரும் வாடிக்கையாளரின் பெயர், பான் கார்டு எண், உடன் பிறந்தவர்கள், வாடிக்கையாளரின் கைரேகை, கண் கருவிழி அமைப்பு உள்ளிட்டவற்றை போட்டோவாக எடுத்து, ஆன்-லைனில் வங்கி தலைமைக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை, வங்கிகள் அந்தந்த வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு வங்கியும், புதிதாக சேரும் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சேகரித்து வருகின்றன.வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்கும் நோக்கில் இத்திட்டம் துவங்கியுள்ளது. கல்விக் கடன்களை பெறுவோர், முறையாக திருப்பி செலுத்துவதில்லை. அவர்கள் இல்லாத பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம் கடனைப் பெறும் நோக்கில், அடையாள அட்டை வழங்கப்படுகிறது என்றார்.