உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புது வழியில் போக்கு காட்டும் வருவாய் துறை; மொபைல் எண் சரியில்லை என பட்டா நிராகரிப்பு

புது வழியில் போக்கு காட்டும் வருவாய் துறை; மொபைல் எண் சரியில்லை என பட்டா நிராகரிப்பு

சென்னை : பட்டா மாறுதலுக்காக விண்ணப்பிக்கும் போது, இ - சேவை மையங்களில் பதிவு செய்யப்படும் மொபைல்போன் எண்கள் மாறுவதால், விண்ணப்பங்கள் பாதியில் முடங்குவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.தமிழகத்தில், வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அதற்கான பட்டா மாறுதல் செய்து கொள்ள வேண்டும். ஒரு, 'சர்வே' எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் கைமாறும் நிலையில், தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

உட்பிரிவில் பிரச்னை

தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, தானியங்கி பட்டா மாறுதல் பணிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. இதில், உட்பிரிவு உருவாக்க வேண்டிய பட்டா மாறுதலில் தான் பிரச்னை ஏற்படுகிறது.உட்பிரிவு பட்டா மாறுதல் பெற வேண்டிய நிலையில், சொத்து வாங்குவோர், இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கின்றனர். இதற்கான நடைமுறை கட்டணமாக, 60 ரூபாய், பட்டா மாறுதலுக்கான கட்டணம், 450 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இதன்படி, அசல் பத்திரங்கள் மற்றும் வில்லங்க சான்றுடன், இ - சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்றனர். அப்போது, தங்கள் ஆதார் எண், மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்கின்றனர். இத்தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் கோப்புகள், சர்வேயர் அல்லது கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள், வருவாய் துறையின், 'தமிழ் நிலம்' மென்பொருள் வாயிலாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:

இ - சேவை மையங்களில், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள், தமிழ் நிலம் சாப்ட்வேர் ஆய்வின் போது மாறுவதாக, அதிகாரிகள் தரப்பில் இருந்து பதில் வருகிறது.

புதிராக உள்ளது

இதனால், தங்களிடம் உள்ள விண்ணப்பத்தில் காணப்படும் எண்ணுக்கு அழைத்தால், விண்ணப்பதாரர் கிடைப்பதில்லை என்று சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகின்றனர்.இ - சேவை மையங்களில் சரியாக கொடுக்கப்படும் மொபைல் போன் எண்கள், அடுத்த நிலையில் எப்படி மாறும் என்பது புதிராக உள்ளது. பட்டா மாறுதல் விண்ணப்பங்களை முடக்க அதிகாரிகள் இப்படி சொல்கின்றனரா; தொழில்நுட்ப கோளாறு காரணமாக மொபைல் போன் எண்கள் மாறுகிறதா என்பது குறித்து, உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இ - சேவை மையத்தில், விண்ணப்பதாரரால் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையிலேயே, நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த விபரங்கள், அடுத்த நிலையில் மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை