ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு என கூறி 11 பேரிடம் ரூ.10 கோடி மோசடி: வாலிபர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி 11 பேரிடம் ரூ. 10 கோடி மோசடி செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி தில்லை மேஸ்திரி வீதியைச் சேர்ந்தவர் சரவணன், 41; பாத்திர கடை நடத்தி வருகிறார். ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்வது தொடர்பாக ஆலோசனைகள் பெற்று வந்தார். கடந்த டிச., மாதம் வாட்ஸ்ஆப் மூலம் சரவணனை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூறினார்.தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தால், நிறுவனம் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி, சரவணன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் முதலீடு செய்தார். ரூ. 1.69 கோடி முதலீடு செய்ததில், ரூ. 3 கோடி லாபத்துடன் வந்துள்ளதாக தெரிவித்தார்.மொத்த பணத்தை எடுக்க முயன்றபோது, மொத்தம் 150 பேர் முதலீடு செய்திருப்பதாகவும், மொத்த பணம் வந்த பின்பு பிரித்து தருவதாக கூறி, காலம் கடத்தி வந்தார்.திடீரென மொபைல் போன் அழைப்புகளை மர்ம நபர் துண்டித்தார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இது தொடர்பாக சரவணன் சைபர் கிரைம் போலீசில் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தார்.சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையிலான போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், புதுச்சேரி குருமாம்பேட்டையை சேர்ந்த சவுந்தராஜன், 36; 'குட்வில்' என்ற பெயரில் போலியான ஆன்லைன் பங்கு சந்தை வர்த்தக இணையதள பக்கம் துவக்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.கரூரில் பதுங்கி இருந்த சவுந்தரராஜனை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.விசாரணையில், சென்னையைச் சேர்ந்த கோகுல் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து, புதுச்சேரியில் சரவணன் உட்பட 11 பேரிடம் ரூ. 10 கோடி வரை வசூலித்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.சவுந்தரராஜன் மீது மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில், ரூ. 19 லட்சமும், பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் ரூ. 49 லட்சம் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.சவுந்தரராஜன் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், முதலீடு செய்வதாக கூறி பெற்ற பணத்தை தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி நிலங்கள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சவுந்தரராஜன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறுகையில், 'சவுந்தரராஜன் மோசடி செய்து பெற்ற பணத்தின் மூலம் வாங்கிய சொத்துக்கள் வழக்கில் சேர்க்கப்படும். பல ஆண்டிற்கு முன்பு பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ. 40 கோடி வரை மோசடி செய்து கைதான குருமாம்பேட்டை சரவணன் என்பவரின் உதவியாளராக சவுந்தரராஜன் இருந்துள்ளார். அவரிடம் பயிற்சி பெற்று இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்' என தெரிவித்தார்.