உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோட்டக்கலை துறையில் ரூ.75 கோடி முறைகேடு; வீணாகும் மத்திய அரசு நிதி

தோட்டக்கலை துறையில் ரூ.75 கோடி முறைகேடு; வீணாகும் மத்திய அரசு நிதி

சென்னை: மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாக வழங்கப்பட்ட, 75 கோடி ரூபாயை, 'வீடியோ' எடுத்தது உள்ளிட்ட செலவுக்கு பயன்படுத்தியதாக கணக்கு காட்டி, தோட்டக்கலை துறையில் முறைகேடு நடந்துள்ளது. தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் வாயிலாக உதவிகளை வழங்கி வருகிறது. இதில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டம் முக்கியமானது. இந்த திட்டத்தை, 26 மாவட்டங்களில் செயல்படுத்த, ஆண்டுக்கு 136 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் பங்கு 60 சதவீதம், மாநில அரசின் பங்கு 40 சதவீதம். மானியம் இந்த நிதியில் சாகுபடி பரப்பு விரிவாக்கம், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, காளான் உற்பத்தி கூடங்கள், பசுமை குடில், நிழல் வலை குடில் அமைத்தல், குளிர்பதன கிடங்குகள் அமைத்தல், தேனி வளர்ப்பு, பழைய தோட்டங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 'துளி நீரில் அதிக பயிர்' என்ற நுண்ணீர் பாசன திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் கட்டமைப்புகள் அமைத்து தரப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், 3,102 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு, 1,173 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரண்டு திட்டங்கள் வாயிலாக, நுாதன முறையில் 75 கோடி ரூபாய் அளவிற்கு தோட்டக் கலை துறையில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, தோட்டக்கலை துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: நுண்ணீர் பாசன திட்டத்திற்கு நிர்வாகச் செலவிற்காக ஆண்டுதோறும் 50 கோடி ரூபாயும், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்திற்கு ஆண்டுதோறும் 20 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளில் இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து, 280 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதில், 75 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. ஆய்வு கூட்டம், அதிகாரிகளுக்கு டீ, காபி, சாப்பாடு, போக்குவரத்து செலவுக்கு இந்த பணம் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது. 'டெண்டர்' அவசியம் திட்டத்தின் சாதனை தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடியோ எடுத்ததாக, ஆண்டுக்கு 3.50 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டப்பட்டு உள்ளது. ஆனால், பல மாவட்டங்களில் வீடியோ எடுக்கப்படவில்லை. சென்னைக்கு அதிகாரிகளை அழைத்து வீடியோ பதிவு செய்து, 'பில்' தொகையை மட்டும் மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளனர்; மாவட்ட அதிகாரிகளிடம் கையெழுத்து பெற்று மோசடி செய்துள்ளனர். 'பெஞ்சல்' புயல் சேதம் தொடர்பான பாதிப்புகளை வீடியோ பதிவு செய்ததாக, 3 கோடி ரூபாய்க்கு செலவு கணக்கு காட்டப்பட்டு உள்ளது. வழக்கமாக, 10,000 ரூபாய்க்கு மேல் ஏதாவது செலவு செய்ய வேண்டும் என்றால், அதற்கு 'டெண்டர்' வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது. டெண்டர் வெளியிடாதது மட்டுமின்றி, வேளாண் துறை செயலர் தலைமையிலான ஆட்சிமன்ற நிர்வாகக் குழு ஒப்புதலும் இல்லாமல் பணம் செலவிடப்பட்டு உள்ளது. தோட்டக்கலை துறை உயர் அதிகாரி பயன்பாட்டுக்கு ஏற்கனவே மூன்று சொகுசு கார்கள் உள்ளன. ஆனால், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாடகைக்கு எடுத்து, அதற்கு மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. மர்மம் டிரைவர், டீசல் செலவுக்கு தனியாக துறையில் இருந்து பணம் கொடுக்கப்படுகிறது. இதெல்லாம் நிர்வாகச் செலவில் காட்டப்படுகிறது. இதற்கெல்லாம் நிதித்துறை எப்படி தாராளமாக ஒப்புதல் வழங்குகிறது என்பது மர்மமாகவே உள்ளது. நுண்ணீர் பாசன திட்ட கட்டமைப்பு அமைப்பதற்கு, 12 சதவீதம் ஜி.எஸ்.டி., கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். இதை அரசு செலுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளிடம் இந்த கட்டணம் பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை