முட்டம் இரட்டை கொலை திசை திருப்பக்கூடாது: சீமான்
அவிநாசி: “மயிலாடுதுறை, முட்டம் இரட்டைக்கொலை சம்பவத்துக்கு, கள்ளச்சாராயம்தான் காரணம் என்பது தெரிந்தும் திசை திருப்பும் செயலை காவல் துறை செய்யக்கூடாது. இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க., அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன், 'தமிழக சட்டசபை தேர்தல் - 2026' குறித்த கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற சீமான் கூறியதாவது:மயிலாடுதுறை இரட்டைக் கொலைக்கு கள்ளச்சாராய விவகாரம்தான் காரணம். ஆனால், முன்விரோதம் என காவல் துறை சொல்கிறது. குற்றத்தை தடுக்காமல் மறைக்கும் முயற்சியில் தி.மு.க., அரசு ஈடுபடுகிறது. அண்ணா பல்கலையாகட்டும்; திருப்பரங்குன்றமாகட்டும், பிரச்னைகளை நேரடியாக கையாள்வதை தி.மு.க., அரசு தவிர்க்கிறது. மயிலாடுதுறை சம்பவத்தில் எதையும் மறைக்காமல், நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல், இதையும் காவல் துறை திசை திருப்பக் கூடாது.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும், 900 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்றுள்ளன. இறந்த ஆடுகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் இழப்பீடு வழங்காமல் போராடும் விவசாயிகளை கைது செய்கின்றனர். அவர்களுக்கு தெரிந்த நியாயம் இதுதான். சீமானை பற்றி பேசினால் கவனம் பெறுவோம் என்பதற்காக, என் மீது வழக்கு போடுகின்றனர். பல பேருக்கு படி அளக்கும் நபராக நான் இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
புல் அவுட்:
'வரிகொடா இயக்கம்'புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது. இதற்காக நிதி ஒதுக்க முடியாது எனக் கூறும் மத்திய அரசுக்கு, தமிழகத்தில் இருந்து வரி வருவாய் தரக்கூடாது. உடனடியாக அமைச்சரவையையும், சட்டசபையையும் கூட்டி வரிகொடா இயக்கம் நடத்த முடிவெடுக்க வேண்டும்.இதுபோன்ற தீர்மானத்தை மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றினால், அவர்களின் வீட்டில் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை சோதனைக்காக நிற்கும்.சீமான், ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்