உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி புதிய மனு குற்றச்சாட்டு பதிவு நிறுத்தம்

செந்தில் பாலாஜி புதிய மனு குற்றச்சாட்டு பதிவு நிறுத்தம்

சென்னை:அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 'போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கியதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குகளின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை துவக்கக் கூடாது; தள்ளிவைக்க வேண்டும்' என, செந்தில் பாலாஜி சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, 'அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, விசாரணையை நடத்த, எந்த தடையும் இல்லை' எனக்கூறி, நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தார். குற்றச்சாட்டு பதிவுக்காக, நேற்று செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

விடுவிக்க கோரி மனு

இந்நிலையில், தன்னை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி சார்பில், வழக்கறிஞர் பரணிகுமார் புதிய மனு தாக்கல் செய்தார்.அதேநேரத்தில், நேற்று காலை நீதிபதி எஸ்.அல்லி முன், வழக்கு விசாரணை துவங்கிய போது, செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் மா.கவுதமன் ஆஜராகி, ''செந்தில் பாலாஜியை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.''அம்மனு மீதான விசாரணை முடியும் வரை, குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும்,'' என்று முறையிட்டார்.அதற்கு நீதிபதி, ''அமலாக்கத் துறைக்கு மனு நகல் வழங்கப்பட்டதா?'' என, கேள்வி எழுப்பினார்; 'ஆமாம்' என, செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

காவல் நீட்டிப்பு

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிக்க, அவரை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, பிற்பகலில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்ற காவலை, வரும் 20 வரை நீட்டித்து, நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டதால், நேற்று அவர் மீதான குற்றச்சாட்டு பதிவு நடக்கவில்லை.

ஏற்க மறுத்த நீதிபதிகள்

அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய மனுவை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ''தங்கள் தரப்பில் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்; இல்லையென்றால், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விடும்,'' என்றார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு பட்டியலிடப்படும் போது விசாரிப்பதாக தெரிவித்தனர்.இதற்கிடையில், செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை, ''19க்குப் பதில் 21ல் விசாரிக்க வேண்டும்,'' என, மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் முறையிட்டார். அதை ஏற்று, 21க்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ