உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,பொறுப்பாளர் மீது பாலியல் வழக்கு!

தி.மு.க.,பொறுப்பாளர் மீது பாலியல் வழக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம் : விழுப்புரம் அருகே, ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி, ஆறு மாதங்களாக தொடர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதைக்கு ஆளாக்கியதாக, தி.மு.க., வானுார் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மீது, திருமணமான பெண் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண், அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, 9 வயதில் மகன் உள்ளார். ஐந்தாண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த இவர், பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தொடர் பலாத்காரம்

அந்த பெண், அருகே உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு, அதே ஊரை சேர்ந்த வானுார் தி.மு.க., மேற்கு ஒன்றிய பொறுப்பாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பாஸ்கரன், ஜல்லி, மணல் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தில், கடந்த ஜூன் மாதம் அப்பெண்ணை மிரட்டி, பாஸ்கரன் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ பதிவு செய்து, அதை காட்டி மிரட்டியே தொடர்ந்து ஆறு மாதங்களாக அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண், கோட்டக்குப்பம் மகளிர் போலீசில், நவ., 19ம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது: வீடு கட்ட மணல், ஜல்லி வாங்கியபோது பாஸ்கரன் அறிமுகமானார். வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுத்துள்ளேன். அடிக்கடி மொபைல் போனில் என்னிடம் பேசிய பாஸ்கரன், 'உன் கணவர் உன்னுடன் இல்லை. எனக்கு திருமணம் ஆகவில்லை. நாம் ஏன் ஒன்று சேர்ந்து வாழக்கூடாது' என கேட்டார். 'இப்படி பேசினால் ஊர் பஞ்சாயத்தில் கூறிவிடுவேன்' என, நான் தெரிவித்தபோது, 'என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. போலீசில் புகார் அளித்தாலும் ஏற்க மாட்டார்கள்' என வாய் சவடால் விட்டார். இந்நிலையில், ஜூன் 8ம் தேதி, நான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, என்னிடம் பேச வேண்டும் எனக்கூறிய பாஸ்கரன், அவரது கார் ஷெட்டிற்கு என்னை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.

வழக்குப்பதிவு

பின்னர், 'நான் அழைக்கும் போதெல்லாம், நீ வர வேண்டும். இல்லாவிட்டால், வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன்' என மிரட்டி, ஆறு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில், கோட்டக்குப்பம் மகளிர் போலீசார், பாஸ்கரன் மீது நேற்று பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, 'அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி உண்மை இருக்கும் பட்சத்தில், கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர். இதற்கிடையே, பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரை கைது செய்யாத போலீசை கண்டித்தும், வானுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், நேற்று காலை திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், வானுார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சக்கரபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தை எப்படி காப்பார்? அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: விழுப்புரம் அருகே தி.மு.க., ஒன்றிய செயலர், பெண் ஒருவரை ஆறு மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 'காவல் துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி' எனக்கூறி, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளார். தி.மு.க., ஆட்சியில், அக்கட்சியினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்துக்கொண்டு கொடூர செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றிய செயலர் வரை, தி.மு.க.,வின் பாலியல் 'சார்'களை கட்டுப்படுத்த முடியாத தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். அப்படிப்பட்ட முதல்வர் தமிழகத்தை எப்படி காப்பார்? பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க., குற்றம் செய்ய அடையாள அட்டை தி.மு.க., ஒன்றிய செயலர் பாஸ்கரன் மீது பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ, பார்ப்பவர்களை பதற வைக்கிறது. தமிழக பெண்களை வேட்டையாடுவதையே, வழக்கமாக வைத்துள்ள தி.மு.க.,வினரின் கோரமுகத்தை, இச்சம்பவம் நமக்கு மீண்டும் ஒரு முறை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தி.மு.க.,காரன் என்பதே குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டது. ஆட்சி கையிலிருக்கும் மமதையில், தமிழக பெண்களை, தேடித் தேடி சீரழிப்பதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது. காலம் காலமாக பெண்களை மட்டம் தட்டுவதையும், இரட்டை அர்த்த வசனங்களை ரசிப்பதையும், வழக்கமாக வைத்துள்ள கூட்டத்திடம், ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால், என்னவாகும் என்பதை, தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ