தஞ்சாவூர்: காலி மதுபாட்டில்களை திரும்ப பெற்று பாதுகாக்க கிடங்கு பிடிக்கவும், அதன் வாடகையை பணியாளர்களே செலுத்தவும், அதிகாரிகள் நிர்பந்திப்பதை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப கொடுத்தால், 10 ரூபாய் வழங்கும் திட்டம், தஞ்சை மாவட்டத்தில், வரும், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான பணியாளர்கள் கூட்டம் சமீபத்தில் நந்தது. இதில், பணியாளர்கள், டாஸ்மாக் கடைகள் அருகிலேயே காலி மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்ள, தனியாக இடம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான வாடகையை பணியாளர்களே செலுத்த வேண்டும் என, டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கு பணியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை விற்கும் போதே, 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. எந்த கடையில் மதுபாட்டில்களை வாங்கினரோ, அதே கடையில் திரும்ப வழங்கினால் பாட்டிலுக்கு, 10 ரூபாய் வழங்கப்படும். திரும்ப பெறாத பாட்டில்களின் தொகை, அரசு கணக்கில் சேர்க்கப்படும். காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது, பாட்டிலில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் இருந்தால் மட்டுமே, காலி மதுபாட்டிலை திரும்ப பெற முடியும். அதேநேரம், காலி மதுபாட் டில்களை வைக்க தனியாக இடத்தை பிடித்து, பணியாளர்களே அதற்கான வாடகையை செலுத்த வேண்டும்; கூடுதல் பணியாளர்களை சொந்த செலவில் பணியமர்த்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்வது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில், தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன், அனைத்து கட்சிகளின் தொழிற்சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை பணியாளர்களே திரும்ப பெற வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். கடைகளுக்கான மின் கட்டணத்தை நிர்வாகமே ஏற்று முழு தொகையை வழங்க வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனை குறையும் கடையில் சோதனை என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.