உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சித்தா மருத்துவ பல்கலை மசோதா கவர்னர் ஒப்புதல் தராததால் தாமதம்

சித்தா மருத்துவ பல்கலை மசோதா கவர்னர் ஒப்புதல் தராததால் தாமதம்

சென்னை:“சித்தா மருத்துவ பல்கலை வேந்தராக, முதல்வரை நியமிப்பதில் கவர்னருக்கு விருப்பமில்லை,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அரசு மற்றும் சுயநிதி யோகா இயற்கை மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.

முதலிடம்

பின், அமைச்சர் கூறியதாவது:அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டுக்காக, 2,320 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், தகுதியான 2,243 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அப்சர் பேகம், 198.5 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார்.நிர்வாக ஒதுக்கீட்டில், 1,187 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,173 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டில், 195 மதிப்பெண்களுடன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசிவனிதா முதலிடம் பிடித்துள்ளார்.இரண்டு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 160 இடங்களும்; 16 சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 960 இடங்களும்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 540 என, 1,660 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங், வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்க உள்ளது.

டெங்கு பாதிப்பு

சித்தா மருத்துவ பல்கலை அமைக்க சென்னை மாதவரம் பகுதியில், 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அவ்வளவு எளிதில் ஒப்புதல் அளிப்பாரா என்பது கேள்விக்குறி.இந்த பல்கலை வேந்தராக முதல்வர், இணை வேந்தராக அமைச்சர், துணைவேந்தர் நியமனம் என்ற வகையில் அறிவிக்கப்பட்டு, சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அதில், கவர்னருக்கு விருப்பமில்லாத நிலையில், தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்குவின் வீரியத்தை கண்டறியும் வகையிலான பகுப்பாய்வு மையமும் அமைக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி