உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் யாரோ கிளம்பி வருகின்றனர் தி.மு.க.,வை தொடக்கூட முடியாது: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

யார் யாரோ கிளம்பி வருகின்றனர் தி.மு.க.,வை தொடக்கூட முடியாது: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: ''இன்றைக்கு யார் யாரோ கிளம்பி வந்து, தி.மு.க.,வை அழித்து விடலாம் என, கனவு காண்கின்றனர். தி.மு.க.,வை எந்த காலத்திலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது,'' என, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, மறைமுகமாக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழா நேற்று நடந்தது . அதில், பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, டிச., 4 வரை நடக்கிறது. இதை எதிர்த்து, அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானம் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். சட்டப் போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடக்கின்றன. வரும் 11ம் தேதி, கூட்டணி கட்சிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக தரும் படிவங்களை, டிச., 4க்குள் நிரப்பி, சமர்ப்பிக்க வேண்டும். அப்படி அளிக்கும் பெயர்கள் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். தேர்தல் அலுவலர்கள், மூன்று முறை வீடுகளுக்கு வருவர். வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமையை இழக்கும் நிலை ஏற்படும். அதனால், எவ்வளவு பெரிய நெருக்கடி ஏற்படும் என, உங்களுக்கு தெரியும். கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் நடந்த ஓட்டுத் திருட்டை, காங்., முன்னாள் தலைவர் ராகுல் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அப்படி ஒரு நிலை, தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, தி.மு.க.,வினருக்கு அதிக பொறுப்பும்; விழிப்புணர்வும் தேவை. மிசா நெருக்கடி காலத்தில், தி.மு.க., சந்தித்த தியாகங்கள் நிறைய உண்டு; தலைவர் முதல் தொண்டர் வரை பல கொடுமைகளை அனுபவித்தனர். ஓராண்டு காலம், கொடுஞ்சட்டத்தில், தி.மு.க.,வை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படிப்பட்ட நீண்ட, நெடிய வரலாறு கொண்டது தி.மு.க., ஆனால் இன்றைக்கு, தமிழகத்தில் புதிது புதிதாக, யார் யாரோ கிளம்பி வந்து, தி.மு.க.,வை அழித்து விடலாம் என, கனவு காண்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தி.மு.க.,வை எந்த காலத்திலும், எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை