உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை அமைச்சர் நிதானம் இல்லாமல் பேசுவது மீனவர் பிரச்னைக்கு தீர்வாகாது இலங்கை முஸ்லிம் காங்., தலைவர் பேட்டி

இலங்கை அமைச்சர் நிதானம் இல்லாமல் பேசுவது மீனவர் பிரச்னைக்கு தீர்வாகாது இலங்கை முஸ்லிம் காங்., தலைவர் பேட்டி

ராமநாதபுரம்:''இலங்கையில் புதிய மீன் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் நிதானம் இல்லாமல் பேசுவது மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வாகாது,'' என ,இலங்கை முஸ்லிம் காங்., தலைவரும், கண்டி பார்லிமென்ட் உறுப்பினருமான ரவூல் ஹக்கீம் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ரவூல் ஹக்கீம் கூறியதாவது: இந்திய, இலங்கை மீனவர் பிரச்னை என்பது இரு சமூகத்திற்கு இடையேயான முக்கிய பிரச்னையாகும். இரு நாட்டு மீனவர்களும் சந்தித்து பேசி ராஜாங்க ரீதியான சமூக தீர்வு ஏற்பட இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மீனவர்களை கைது செய்வதை இலங்கை கடற்படையினர் நிறுத்த வேண்டும்.இலங்கை ஜனாதிபதி அனுராகுமார திசநாயகே இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசுகையில் மீனவர்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அது விரைவில் நடக்கும் என நம்புகிறோம். இலங்கையில் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மீன் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் மீனவர் பிரச்னையில் நிதானம் இல்லாமல் சூடாக பேசுவது மீனவர் பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தாது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது இந்திய, சீன அரசுகள் இலங்கைக்கு கடனுதவி அளித்ததுடன், பெரும் தொகையை நிதியாக அளித்ததால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டு வருகிறது.தற்போது இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல் சுனாமியைப்போல் நடந்து முடிந்துள்ளது. பல முக்கிய அரசியல் தலைவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. புதிய ஜனாதிபதி அனுராகுமார திசநாயகே இலங்கை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என நம்புகிறோம். உள்நாட்டில் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி இடையே பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் வெளிநாடுகளில் ஜனாதிபதியை குறைத்து பேசுவது சரியாக இருக்காது என்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajah
டிச 29, 2024 07:01

இவரைப் பார்த்தாவது ராகுல் பப்பு திருந்துவாரா? என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் தங்கள் ஜனாதிபதியை வெளிநாடுகளில் அவதூறாகப் பேச முடியாது என்கின்றார்.


சமீபத்திய செய்தி