உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீரங்கநாதரின் பாதமே கதி : டிச.30 - இன்று வைகுண்ட ஏகாதசி

ஸ்ரீரங்கநாதரின் பாதமே கதி : டிச.30 - இன்று வைகுண்ட ஏகாதசி

21 நாள் விழா பெருமாள் பக்தர்களுக்கு 'கோயில்' என்றாலே அது திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் தான். இதனை 'பூலோக வைகுண்டம்' என்பர். இங்கு நடக்கும் திருவிழாக்களில் வைகுண்ட ஏகாதசி புகழ் மிக்கது. வைகுண்ட ஏகாதசிக்கு முன் வரும்பத்து நாளை 'பகல் பத்து' (பகலில் சுவாமி புறப்பாடு) என்றும், பின் வரும் பத்து நாளை 'ராப்பத்து'(இரவில் சுவாமி புறப்பாடு) என்றும் அழைக்கிறோம். இந்த 21 நாள் 'திருஅத்யயன உற்ஸவம்'. 'அரங்கனை தரிசித்த என் கண்கள் வேறொன்றை காண விரும்பாது' என்கிறார் ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார். மோகினி அலங்காரம், கைத்தல சேவை, வேடுபறி உற்ஸவம், நம்மாழ்வார் மோட்சம் ஆகியவை விசேஷமானவை. அவ்வாறே ஆகட்டும்விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு உரை எழுதியவர் பராசர பட்டர். இவர் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ரங்கநாயகி தாயாரை மட்டுமே வணங்குவார்.தானும் பராசரரின் அன்பை பெற வேண்டும் என ரங்கநாதருக்கு ஆசை வந்தது. அதற்காக பராசரரின்முன்பு தாயாரின் வடிவில் காட்சி அளித்தார். அப்போது தாயாரின் கண்களைக் கண்ட பட்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்திரனைப் போல குளிர்ச்சியாக ஒரு கண்ணும், சூரியனைப் போல வெம்மையாக ஒரு கண்ணும் உள்ளதே என யோசித்தார். வந்திருப்பது ரங்கநாதர் என உணர்ந்தார். தான் தரிசித்தது போலவே தாயார் கோலத்தில், ரங்கநாதர் அருள்புரிய வேண்டும் என கேட்டார். ரங்கநாதரும் அவ்வாறே செய்வதாகச் சொன்னார். அதனால் தான் ஏகாதசி அன்று மோகினி வடிவில் வருகிறார். பாவம் தீர... அசுர சகோதரர்களான மது, கைடபருடன் போரிட்டார் பெருமாள். இருவரும் பெருமாளிடம் சரணடையவே வைகுண்டத்தில் அவர்களுக்கு இடம் கொடுத்தார். நாங்கள் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என பெருமாளிடம் வேண்டினர். இதற்காக வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் வழியாக பெருமாள் வருகிறார். அப்போது அவரை தரிசிப்பவருக்கு பாவம் தீர்ந்து மோட்சம் கிடைக்கும். அன்று மூலவர் ரங்கநாதர் முத்தங்கியிலும், உற்ஸவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டையிலும் காட்சி தருகின்றனர்.அரையர் சேவை * ஆழ்வார்கள் பாடிய திவ்ய பிரபந்த பாடல்களை பாடுவதுஅரையர் சேவை. * பாடுபவர்கள் இடுப்பில் பஞ்ச கச்சம்(வேட்டி) கட்டியும், உடம்பில் 12 இடங்களில் திருமண் இட்டும், சரிகை வேலைப்பாடு கொண்ட 'குல்லாய்' என்ற தொப்பியும் அணிந்தபடி இருப்பர். * ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள உற்ஸவர் நம்பெருமாள் முன்பு கைகளில் தாளமிட்டபடி பாடலுக்கு ஏற்ப ஆடுவர். * திவ்ய பிரபந்த பாசுரத்தின் பொருளை உடல் மொழியால் நடித்துக் காட்டுவர். * பகல் பத்தில் திருமங்கையாழ்வார் பாடிய பெரிய திருமொழி, ராப்பத்தில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியை பாடுவர். திருமணக்கோலத்தில்...சோழ நாட்டின் படைத்தலைவர் திருமங்கை. இவர் அன்னதானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பணம் இல்லாத போது வழிப்பறியில் ஈடுபட்டார். அவரை திருத்துவதற்காக திருமணக்கோலத்தில் பெருமாளும், மனைவி மகாலட்சுமியும் வந்தனர். அவர்களிடம் திருமங்கை வழிப்பறி செய்ய துணிந்தார். அப்போது அவரது காதில் எட்டெழுத்து மந்திரமான 'ஓம்நமோ நாராயணாய' என்பதை ஓதினார் பெருமாள். அவரும் மனம் திருந்தி ஆழ்வார்களில் ஒருவராக திருமங்கையாழ்வார் என பெயர் பெற்றார். இதை நினைவு கூரும் விதமாக ராப்பத்து எட்டாவது நாள் வேடுபறி நிகழ்ச்சி நடக்கும்.நம்மாழ்வார் மோட்சம்வைகுண்ட ஏகாதசி விழாவின் 21ம் நாளில் நடப்பது நம்மாழ்வார் மோட்சம். இதில் பெருமாளின் திருவடியை வணங்குவது போல நம்மாழ்வாரை துளசி இலையால் மூடி வைப்பர். இந்நிகழ்வை 'நம்மாழ்வார் திருவடி தொழல்' என்பர். சிறிது நேரத்தில், ''எங்களை வழிநடத்தும் நம்மாழ்வாரை திரும்பவும் தாருங்கள்'' என அரையர்கள் வேண்டுவர். பெருமாளின் சார்பில் பட்டர்கள், “தந்தோம், தந்தோம், தந்தோம்” என மூன்று முறை சொல்லிக் கொண்டே நம்மாழ்வாரை கொடுப்பர். இதை தரிசிப்பவருக்கு மனிதனாக பிறந்த பலன் கிடைக்கும். -திருச்சி ராதிகா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ