ஸ்டாலின் ஒரு கோழை: அன்புமணி ஆவேசம்
திண்டிவனம்: 'தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ளேன்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சட்டசபை தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. விவசாய பெருமக்களின் காலை தொட்டு நான் கேட்கிறேன். மீண்டும் தி.மு.க.விற்கு ஓட்டளிக்காதீர்கள். தி.மு.க., ஆட்சியில் ஏழு விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திண்டிவனத்தில் ஏரியில் பஸ் ஸ்டாண்டு கட்டியுள்ளனர். உச்ச நீதிமன்றம், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறி, 1,250 நாட்கள் ஆகிறது. இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத ஸ்டாலின், வன்னியர் சமுதாயத்தின் துரோகி. அவர் ஒரு கோழை. ஒரு வன்னியர் கூட தி.மு.க.,விற்கு ஓட்டு போடக்கூடாது. இடஒதுக்கீடு வழங்கக் கோரி, பா.ம.க., சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும். அப்போது ஸ்டாலின் என்ன செய்கிறார் என்று பார்ப்போம். பஞ்சாயத்து தலைவருக்கு கூட ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உரிமை உள்ளது. இவ்வாறு அன்புமணி பேசினார்.