நாகப்ப படையாட்சிக்கு சிலை ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: 'தென் ஆப்பிரிக்கா சத்தியாகிரக போராட்ட வீரர் சாமி நாகப்ப படையாட்சியருக்கு, மணி மண்டபத்துடன் கூடிய, முழு உருவ சிலை அமைக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: காந்தி, இந்தியா திரும்புவதற்கு முன், தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் அங்கு இனவெறி மற்றும் அடக்குமுறைக்கு எதிராக போராடியதன் வாயிலாக, ஒரு தலைவராக உருவெடுத்தார். அந்த காலக்கட்டத்தில் சத்தியாகிரகம் என்ற அவரது போராட்ட முறை உருவானது. அவருக்கு ஆதரவாக இந்தியர்கள் பலர் களம் இறங்கினர். அவர்களில் மிக முக்கியமானவர், மயிலாடுதுறை அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த, சாமி நாகப்ப படையாட்சி. காந்தி மீது போலீசார் தாக்குதல் நடத்திய போது, அவர் மீது அடி விழாமல் பாதுகாத்தார். அப்போது, சாமி நாகப்ப படையாட்சிக்கு வயது 18 தான். அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சிறையில் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு, சிறையில் இருந்து வெளி வந்த ஒரு வாரத்தில், அவர் இறந்தார். அவரது புகழுக்கு, பெருமை சேர்க்கும் வகையில், ஜோகன்னஸ்பர்க் பகுதியில் சாமி நாகப்ப படையாட்சிக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை முன்மாதிரியாக எடுத்து, மயிலாடுதுறையில் அவருக்கு மணி மண்டபத்துடன் கூடிய, முழு உருவ சிலை அமைத்து, அவரை கவுரவப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.