த.வெ.க., படகுகளுக்கு மண்ணெண்ணெய் மானியம் திடீர் நிறுத்தம்; விஜய் கண்டனம்
திருநெல்வேலி:'தமிழக வெற்றிக் கழகம் என, பெயர் எழுதிய படகுகளுக்கு மண்ணெண்ணெய் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது' என, த.வெ.க., தலைவர் விஜய், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நாட்டுப்படகு மீனவர்களுக்கு, அரசு மீன்வளத்துறை சார்பில் மாதந்தோறும், 300 லிட்டர் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. கூட்டப்புளி கடற்கரை கிராமத்தில், 150 படகுகள் உள்ளன. சில நாட்களுக்கு முன் த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி, கட்சி மீனவர்கள், தங்கள் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என, பெயரெழுதி வண்ண பெயின்ட் அடித்து, கடலில் பேரணி சென்றனர். இதையறிந்த மீன்வளத் துறையினர், 'தமிழக வெற்றிக் கழகம் என பெயர் எழுதிய படகுகளின் உரிமையாளர்கள் 10 பேருக்கு, அரசு மானிய விலை மண்ணெண்ணெய் கிடையாது' என, கூறினர்.இதுகுறித்து மீனவர்கள் விஜயிடம் தெரிவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், 'மீனவ நண்பர்களின் படகுகளில் தமிழக வெற்றிக்கழகம் என குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? தி.மு.க., என எழுதினால் இப்படி செய்வீரா? எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கபட நாடக தி.மு.க., அரசு இந்த போக்கை தொடர்ந்தால், மீனவர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.