சென்னை: ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டீலர்களுக்கு வெளிப்படையான, சூத்திரம் அடிப்படையிலான வரம்பு திருத்தம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் முரளி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் உருவாக்கம், கிராமப்புற இந்தியா முழுவதும் எரிபொருள் கிடைப்பதை விரிவாக்க உதவியது. விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் தேசிய வளர்ச்சியை வலுப்படுத்தியது. 2025ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியா உலகின் மிகப்பெரிய எரிசக்தி சில்லறை விற்பனை அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் நிலையங்கள் 88,000 ஆகவும், தனியார் நிறுவன நிலையங்கள் 13,000 ஆகவும் உள்ளன. ஆனால், ஒரு நிலையத்தின் சராசரி மாதாந்திர விற்பனை சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துள்ளது. 2012ல், சராசரியாக 170 கிலோ லிட்டர் விற்ற நிலையில் தற்போது, 140 கிலோ லிட்டராக குறைந்துள்ளது. நவீன வாகனங்கள் குறைவான எரிபொருளை பயன்படுத்துகின்றன, எரிபொருள் திறனும் மேம்பட்டுள்ளது. எலக்ட்ரிக், சி.என்.ஜி., வாகனங்களின் எழுச்சி, அத்துடன் தொழில் நிறுவனங்கள், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடமிருந்து நேரடி யாக எரிபொருள் பெறுவது ஆகியவை விற்பனையை மேலும் பாதித்துள்ளன. இதன் விளைவாக, எரிபொருள் விநியோகஸ்தர்கள் வருமானம் குறைந்து வருகிறது. எரிபொருள் விற்பனை யிலும் பெரிய லாபம் இல்லை . ஒருவர் 100 ரூபாய்க்கு எரி பொருள் நிரப்பினால் அதில், 35-40 ரூபாய் வரை மத்திய மற்றும் மாநில வரிகளான கலால் வரி மற்றும் வாட் பூர்த்தி செய்யச் செல்கிறது. அடுத்து 45-50 ரூபாய் வரை இறக்குமதி, சுத்திகரிப்பு, போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தலுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்கிறது. வெறும் 2.50-3.50 ரூபாய் மட்டுமே டீலருக்கு கிடைக்கிறது. எனவே, டீலர்கள் பெரிய லாபத்தை ஈட்டுவதில்லை. எனவே, விநியோகஸ்தர்களின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளிப்படையான, சூத்திரம் அடிப்படையிலான வரம்பு திருத்தம் செய்ய வேண்டும். எரிபொருள் மற்றும் எரிசக்தி கொள்கைகளை உருவாக்கும்போது ஆலோசிக்க வேண்டும். வலுவான மற்றும் நிதி ரீதியாக பாதுகாப்பான விநியோகஸ்தர் பிணையம் இல்லாவிட்டால், இந்தியாவின் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் சிக்கல் தான் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.