சென்னை : ''தற்போது, 100 தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. எந்தெந்த தொகுதிக்கு தடுப்பணை தேவை என்பதை எழுதிக் கொடுங்கள். வரும் நிதியாண்டில் எவ்வளவு ஏற்க முடியுமோ, அந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - பழனியாண்டி: திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டை அருகே, உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்டப்படுமா?அமைச்சர் துரைமுருகன்: உய்யகொண்டான் கால்வாய், 69 கி.மீ., துாரம் உள்ளது. பாசனத்திற்காக வடிவமைக்கப்பட்ட சமதள கால்வாய்.திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில், 40,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. சோமரசன்பேட்டை பகுதியில் தடுப்பணை கட்ட இயலாது; கால்வாயை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - பழனியாண்டி: கால்வாய் பள்ளமாக உள்ளதால், பாசனத்திற்கு ஏதுவாக இல்லை. இரண்டு தடுப்பணைகள் கொடுத்தால், உதவியாக இருக்கும்.துரைமுருகன்: பாசன கால்வாயில் தண்ணீரை தடுத்து, தடுப்பணை கட்ட இயலாது. எனினும், உறுப்பினர் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்.தி.மு.க., - பிச்சாண்டி: கீழ்பெண்ணாத்துார் தொகுதியில், துரிஞ்சலாறு ஆறு ஓடுகிறது. அதில், தடுப்பணை கட்ட அறிவிப்பு வெளியானது; ஆனாலும், கட்டப்படவில்லை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.துரைமுருகன்: இப்போது பெய்யும் மழையை தடுக்க, தடுப்பணை கட்டினால் போதாது. மழைக்கு அணையே நிற்க மாட்டேன்கிறது. எனினும் உறுப்பினர் கோரிக்கை கவனிக்கப்படும்.வி.சி., - சிந்தனைச் செல்வன்: காட்டுமன்னார்கோவில் தாலுகாவில், ஆதனுார் என்ற இடத்தில், கொள்ளிடம் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. அது, வடிநிலப் பகுதியாக இருப்பதால், கீழணையில் இருந்து மணல் அடித்து வந்து, 'ஷட்டர்' திறக்க முடியாத நிலை உள்ளது. மணலை அப்புறப்படுத்த வேண்டும்.துரைமுருகன்: மழை நின்றதும் மணல் அகற்றப்படும்.பா.ம.க., - மணி: மழை காலத்தில் கடலுக்கு வீணாக செல்லும் நீரை தடுத்து நிறுத்தும் வகையில், காவிரி, பாலாறு, தென்பெண்ணை என அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை கட்டப்படுமா?துரைமுருகன்: தடுப்பணை கட்ட வேண்டியதை அரசு உணர்ந்துள்ளது. நீர்வளத்துறையில் மற்ற திட்டங்களை விட, தடுப்பணை கட்டுவதற்கு அதிக முக்கியத்தும் தர, முதல்வர் உத்தரவிட்டார். தற்போது, 100 தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. எந்தெந்த தொகுதிக்கு அவசியம் தடுப்பணை தேவை என்பதை எழுதி கொடுங்கள். வரும் நிதியாண்டில் எவ்வளவு ஏற்க முடியுமோ, அந்த அளவு எடுத்து கொள்ளப்படும்.தி.மு.க., - மணிகண்ணன்: தென்பெண்ணையாற்றில் இருந்து கூடுதல் நீர் வரும் போது, மலட்டாறில் திறந்து விடுகின்றனர். அந்த ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும்.துரைமுருகன்: வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டதை செப்பனிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 40 பொறியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக செய்ய வேண்டியதை அரசு கவனிக்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது.