வாசகர்கள் கருத்துகள் ( 1 )
லஞ்சம் கொடுத்தால் உடனே கிடைக்கும்.
சென்னை:சாதாரண பட்டா மாறுதல், 15 நாட்களிலும், உட்பிரிவு பட்டா மாறுதல், 27 நாட்களிலும் முடிக்கப்படு வதாக, வருவாய் துறை தெரிவித்துள்ளது. இந்த கால வரம்பில், பட்டா மாறுதல் செய்யப்படுகிறதா என்பது கேள்விக்குறி.வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டா வில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். இதற்கான பணிகளை விரைவாக முடிப்பதற்காக, வருவாய் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, உட்பிரிவு ஏற்படுத்த தேவையில்லாத பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்கள், பத்திரப்பதிவின் போது பெறப்பட்டு, தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கப்படுகிறது. உட்பிரிவு ஏற்படுத்த வேண்டிய சொத்துக்களில், நில அளவை முடிந்த பின், பட்டா மாறுதல் மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பான விண்ணப்பங்கள், இ - சேவை மையங்கள் மூலமாக பெறப்பட்டு, 'ஆன்லைன்' முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன. இந்த பணிகளை விரைவாக முடிக்க, வருவாய் துறை அவகாசம் நிர்ணயித்துள்ளது.இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுவாக பட்டா மாறுதல் விண்ணப்பங்களை முடிக்க, மாதக்கணக்கில் ஆவதாக புகார் கூறப்படு கிறது. இதனால், குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்க கெடு விதிக்கப்பட்டது. உட்பிரிவு உருவாக்க தேவை இல்லாத சொத்துக்களுக்கு, பட்டா மாறுதல் விண்ணப்பங்களை முடிப்பதற்கான அவகாசம், 2021ல், 38 நாட்களாக இருந்தது; இது தற்போது, 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு உருவாக்க வேண்டிய பட்டா மாறுதல் விண்ணப்பங்களை முடிப்பதற்கான கெடு, 2021ல், 70 நாட்களாக இருந்தது; தற்போது, 27 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சராசரி கால அளவை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.இவ்வாறு அவர் கூறினார். சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது: ஒரு சில விண்ணப்பங்களுக்கு வேண்டுமானால், இந்த குறிப்பிட்ட கால வரம்பில் தீர்வு கிடைக்கலாம். ஆனால், அனைத்து விபரங்களும் சரியாக அளிக்கப்பட்ட விண்ணப்பங்களும், அதிகாரிகளால் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஒரு சொத்து வாங்கியவர், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் போது, அவர் பெயருக்கு பதிவான பத்திரம், விற்றவர் பெயரில் உள்ள பத்திரத்தை மட்டுமே அவரால் அளிக்க முடியும். இதில், விற்றவருக்கு முந்தைய நபர் பெயரில் பட்டா இருக்கும் நிலையில், தொடர்பு ஆவணங்கள் ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. பதிவுத்துறையிடம் இருந்து இதுபோன்ற ஆவணங்களை, 'ஆன்லைன்' மூலமாக வருவாய் துறை சரிபார்க்கும் வசதி வேண்டும். மேலும், பத்திரப்பதிவின் போது விற்பவர் பெயரில் பட்டா இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த டி.ஆர்.வேலரசு கூறியதாவது: நான் உள்ளிட்ட, 11 பேர் பட்டா பெயர் மாறுதலுக்காக, 2022ல் விண்ணப்பித்தோம். தொடர்ந்து மனுக்கள் கொடுத்ததால், இதில், ஏழு பேருக்கு பட்டா கிடைத்தது. எஞ்சிய, நான்கு பேர் இன்னும் தாலுகா அலுவலகம், ஜமாபந்தி, கலெக்டர் அலுவலகம் என, தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும், அதிகாரிகள் இதில் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
லஞ்சம் கொடுத்தால் உடனே கிடைக்கும்.