| ADDED : மார் 04, 2024 04:43 AM
காரைக்கால் : புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில், புகழ் பெற்ற நளநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா ஒரு வாரத்திற்கு விமரிசையாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடந்தது.காலை கொடியேற்றத்திற்கு முன், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. அப்போது, திடீரென கொடிமரத்தின் மேல்பகுதி உடைந்து விழுந்தது.கோவிலின் மேல் தளத்தில் கொடி மரத்தின் உடைந்த பாகம் விழுந்ததால் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. அதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்து, புதிய கொடிமர கம்பம் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து, கொடியேற்றப்பட்டது.கொடிமரம் உடைந்தது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரிக்கப்படுகிறது.