உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேதனையுடன் வெளியேறினார் கவர்னர் சட்டசபை நிகழ்வு குறித்து விளக்கம்

வேதனையுடன் வெளியேறினார் கவர்னர் சட்டசபை நிகழ்வு குறித்து விளக்கம்

'தேசிய கீதத்தை பாடாமல் அவமதித்ததால், கவர்னர் ரவி வேதனையுடன் சட்டசபையை விட்டு வெளியேறினார்' என, கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ் மொழி மற்றும் மாநிலத்தின் வளமான கலாசாரம், மரபுகள், பாரம்பரியத்தின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத மரியாதை மற்றும் போற்றுதலை, கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் புனிதத்தை எப்போதும் நிலைநாட்டி, ஒவ்வொரு நிகழ்விலும் மரியாதையுடன் அவர் பாடி வருகிறார். உலகின் மிக பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற தமிழ் மொழி, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. மாநிலத்திலும், தேசிய அளவிலும், தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கு, கவர்னர் பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகிறார்.அரசியலமைப்பு சட்டத்தை மதித்து, அரசியல் சட்ட கடமைகளை பின்பற்றுவது கவர்னரின் கடமை. இந்திய நாட்டின் பெருமையான தேசிய கீதத்திற்கு மரியாதை அளிப்பது, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமை. ஒவ்வொரு மாநில சட்டசபையிலும், கவர்னர் உரையின் துவக்கம் மற்றும் முடிவில் தேசிய கீதம் பாடப்படுகிறது. தேசிய கீதத்திற்குரிய விதிமுறைகளின்படி இது அவசியம். பலமுறை முன்கூட்டியே இதற்கான நினைவூட்டல்களை தெரிவித்த பின்னரும், இந்த கோரிக்கைகளை வேண்டுமென்றே தமிழக சட்டசபை புறக்கணித்துள்ளது துரதிருஷ்டவசமானது.கவர்னர் உரையின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் இருந்த போது, அரசியலமைப்பு கடமைகளை மரியாதையுடன் நினைவூட்டி, முதல்வர் மற்றும் சபாநாயகரை தேசிய கீதம் பாடுவதற்கு, கவர்னர் வேண்டுகோள் விடுத்தார். அவரின் கோரிக்கை திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. கவர்னர் உரையின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது, அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். இதனால், கவர்னர் வேதனையுடன் சட்டசபையை விட்டு வெளியேறினார். இந்திய அரசியலமைப்பு மேன்மையை போற்றவும், அனைத்து அரசு விழாக்களிலும் தேசிய கீதத்திற்கான மரியாதையை மீட்டெடுக்கவும், தமிழ் மொழியின் பெருமையை நிலைநிறுத்தவும் தன் நிலைப்பாட்டில் கவர்னர் உறுதியாகவுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ