நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கு தடையில்லை
சென்னை:நாளை துவங்க உள்ள, 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற மருத்துவ திட்டத்துக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம், கடந்த மாதம் 15ம் தேதி துவக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அசோக் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் இனியன் ஆகியோர், தனித்தனியாக பொது நல மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுகளை கவரும் உள்நோக்குடன், ஆக., 2ம் தேதி, 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற பெயரில், மருத்துவ திட்டம் துவங்க உள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார். அதற்கு பதிலளித்து, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தி.மு.க., தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'அரசு திட்டங்களுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக பின்பற்ற வேண்டும்' எனக்கூறி, 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற மருத்துவ திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும், மனுவுக்கு தேர்தல் கமிஷன், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தி.மு.க., தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர். நாளை முதல் துவக்கம் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் நாளை, 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்களை துவக்கி வைக்க உள்ளேன். தமிழகத்தில் உள்ள, 38 மாவட்டங்களிலும் நடக்கும் சிறப்பு முகாம்களில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும். மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டோர், மனநல பாதிப்பு உடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலுாட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் என, சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கு, இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை முகாம்கள் நடக்கும். முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, ரத்தப் பரிசோதனை முடித்து, முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விபரங்கள், அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வழியே அனுப்பப்படும். அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு மற்றும் தொண்டை, பல் மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இம்முகாமை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.