| ADDED : டிச 04, 2025 09:12 PM
புதுடில்லி: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதேநேரத்தில் ராம ரவிக்குமாரும் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதனையடுத்து அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் கிளை அமர்வில் தமிழக அரசு முறையிட்டது. ஆனால், இந்த மனுவை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து இன்று இரவுக்குள் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதனை நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பது தான் பிரச்னை. மற்றபடி கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை. ஐகோர்ட் உத்தரவால், தமிழகத்தில் சட்டப் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.இந்நிலையில், இந்த வழக்கில் மனுதாரர் ராம ரவிக்குமார், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த மனுவில் ராம ரவிக்குமார் கூறியுள்ளார்.