உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ட்ரோன், ரேடார், ஜாமர் கருவிகளின் தரத்தை பரிசோதிக்க காஞ்சியில் மூன்று மையங்கள்

ட்ரோன், ரேடார், ஜாமர் கருவிகளின் தரத்தை பரிசோதிக்க காஞ்சியில் மூன்று மையங்கள்

சென்னை:திருச்சி மாவட்டம் துவாக்குடியில், 49 கோடி ரூபாயில், ராணுவ துறைக்கான உலோகவியில் மற்றும் இயந்திரங்களுக்கான பொது சோதனை மையத்தின் கட்டுமான பணியை, 'டிட்கோ' துவக்கிஉள்ளது. 'ட்ரோன், ரேடார், ஜாமர்' உள்ளிட்ட கருவிகளின் தரத்தை பரிசோதிக்கும் மற்ற மூன்று சோதனை மையங்களும், இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

தொழில் கொள்கை

தமிழகத்தில், வான்வெளி மற்றும் ராணுவ துறைகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, தமிழக வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை, 2022ல் தமிழக அரசு வெளியிட்டது. இதன் வாயிலாக, அடுத்த 10 ஆண்டுகளில், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.சென்னை, திருச்சி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை உள்ளடக்கி, ராணுவ தொழில் வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது.இந்த வழித்தடத்தில், வான்வெளி மற்றும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொழில் துவங்குவதுடன், அவற்றின் தரத்தை பரிசோதிக்கும் பொது சோதனை மையங்களும் அமைக்கப்பட உள்ளன.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வல்லம் வடகாலில், ஆளில்லா விமான தொழிலுக்கான பொது சோதனை மையம் அமைக்கப்படுகிறது. இதை, கெல்ட்ரான், எஸ்.ஐ.பி.எல்., - எஸ்.டி.சி., அவிஷ்கா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, 45 கோடி ரூபாய் செலவில், டிட்கோ அமைக்கிறது.இரண்டாவதாக, மின்னணு போர் முறைக்கான சோதனை மையத்தை, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, டிட்கோ அமைக்கிறது. திட்ட செலவு, 49.96 கோடி ரூபாய்.மேலும், மின்னணு ஒளியியல் பொது சோதனை மையம், 41 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.

கொள்முதல்

இந்த மூன்று சோதனை மையங்களின் கட்டுமான பணி முடிவடைந்த நிலையில், உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி நடக்கிறது. தற்போது, திருச்சி துவாக்குடியில், 49 கோடி ரூபாயில், உலோகவியல் மற்றும் இயந்திரங்களுக்கான சோதனை மைய கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. இதை, 'மைக்ரோலேப், பாரத் எர்த் மூவர்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், வைத்தீஸ்வரன் இண்டஸ்ட்ரீஸ்' ஆகிய நிறுவனங்கள் அமைக்கின்றன.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், முப்படைகளுக்கு தேவைப்படும் தளவாடங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. அவை, சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட வேண்டும். தளவாடங்களின் தரத்தை பரிசோதிக்கும் சோதனை மையங்கள் மிகவும் குறைவு; கட்டணம் அதிகம்.எனவே, தமிழகத்தில் குறைந்த கட்டணத்தில், சர்வதேச தரத்தில் ராணுவ தளவாடங்களின் தரத்தை பரிசோதிக்க, ராணுவ அமைச்சகத்தின் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், நான்கு சோதனை மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொன்றின் திட்ட செலவில், 75 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள நிதியை தமிழக அரசும், கூட்டு நிறுவனங்களும் செலவு செய்கின்றன. ஆளில்லா விமான பொது சோதனை மையத்தில், 'ட்ரோன்' உள்ளிட்ட சாதனங்களின் தரத்தை பரிசோதிக்கலாம்.

புதிய முதலீடுகள்

மின்னணு போர் முறை சாதன சோதனை மையத்தில், ரேடார், ஜாமர் போன்றவற்றையும், மின்னணு ஒளியியல் சோதனை மையத்தில், அதிக ஒலி எழுப்பும் கருவி, இரவிலும் பார்க்கக்கூடிய கருவிகள் போன்றவற்றின் தரத்தையும் சோதிக்கலாம். உலோகவியல் சோதனை மையத்தில், உதிரிபாகங்களின் தரம், ஆயுட்காலம் போன்றவற்றை சோதிக்க முடியும். இந்த மையம் அடுத்த ஆண்டிலும், மற்ற மூன்று மையங்கள், வரும் டிசம்பருக்குள்ளும் செயல்பாட்டிற்கு வரும். இதனால், இந்த தொழில்களில் புதிய முதலீடுகளும் ஈர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி