என்.ஜி.ஓ., சங்கத்தேர்தலில் கடும் போட்டி
மதுரை:தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் எனும் என்.ஜி.ஓ., சங்கத்தில் மாநில தேர்தலையொட்டி கடும் போட்டி உருவாகியுள்ளது.பிரிட்டிஷ் காலம் முதல் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலனுக்காக 1919ல் உருவாகி, 1920ல் அறிவிக்கப்பட்டு, 1924ல் அங்கீகாரம் பெற்றது அரசு அலுவலர் இயக்கம். நுாறாண்டுகளைக் கடந்து இன்று அரசு அலுவலர் ஒன்றியமாக இயங்கும் என்.ஜி.ஓ., சங்கம் அரசு அலுவலர்களுக்கான பெரிய இயக்கமாக உள்ளது.இதில் 150க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த இணைப்பு இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, வட்டக்கிளை, மாவட்ட மையம், மாநில மையத்திற்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். நுாறு ஆண்டுகளில் அரசியல் கட்சிகளைப் போலவே பல்வேறு பிளவுகள், பிரச்னைகளைத் தாண்டி இந்த இயக்கம் செயல்படுகிறது.சங்கத்தின் முன்னாள் தலைவர் சண்முகராஜன் 2 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றபோது அப்போதைய துணைத் தலைவர் அமிர்தகுமாரிடம் சங்க தேர்தலை நடத்தும்படி தெரிவித்துள்ளார். ஆனால் 2 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இச்சங்கத்தில் பல்வேறு துணைச் சங்கங்கள் இணைவிப்பு பெற்றுள்ள நிலையில், அவர்களில் பலர் செயற்குழுவைக் கூட்டி, சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிவகங்கை துரைப்பாண்டியை தலைவராக தேர்வு செய்தனர்.இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தேர்தல் நடத்த துரைப்பாண்டியன் உத்தரவு பெற்றார். இதன்பின் திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக வட்டக்கிளை நிர்வாகிகள் தேர்வின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல மாவட்டந்தோறும் நிர்வாகிகளை தேர்வு செய்து, அதனடிப்படையில் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்ய உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.பல மாவட்டங்களில் என்.ஜி.ஓ., சங்கத்திற்கு ரூ. பல கோடி அளவுக்கு சங்க கட்டடம், கடைகள் என சொத்துக்கள் உள்ளன. எனவே நிர்வாகத்தை கைப்பற்ற, துணைத் தலைவர் அமிர்தகுமார், தற்போதைய தலைவர் துரைப்பாண்டியன் தரப்பினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மாவட்டம் தோறும் நிர்வாகிகள், உறுப்பினர்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். மாநில அளவில் பல ஆண்டுகளாக கோலோச்சிய சங்கம் என்பதால் அரசு, பிற சங்கங்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.