உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு

நான்கு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு

சென்னை : தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில், நான்கில் இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில், 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில், ஆண்டுக்கு ஒரு முறை, ஐந்து முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரலில், 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி; கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை; பெரம்பலுார் மாவட்டம் திருமாந்துறை மற்றும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில், இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கார், ஜீப் போன்றவை ஒரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை. இரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில், 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணத்தில், 70 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 15 ரூபாயும், இரு முறை பயணிக்க 20 ரூபாயும், மாதாந்திர கட்டணத்தில், 395 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் விரைவில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கட்டண உயர்வு விபரத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளிப்படையாக அறிவிப்பதில்லை. இதனால், வாகன ஓட்டிகளுக்கு எந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்கிற விபரம் தெரிவதில்லை. கட்டண உயர்வு விபரத்தை, ஆணையம் வெளிப்படையாக அறிவிப்பதுடன், அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. 'சுங்கக் கட்டண உயர்வு, வாகனங்கள் வைத்திருப்போரை மட்டும் பாதிப்பதில்லை. சுங்கக்கட்டண உயர்வை தொடர்ந்து, தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும். அதற்கு இணையாக, அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரக்கூடும். எனவே, இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ள, சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்' என, பா.ம.க., தலைவர் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Annamalai
செப் 01, 2025 13:56

38 சுங்க சாவடிகள் கட்டணம் உயர்த்த பட்டு உள்ளது என்பது தான் செய்தி .ஒரு சுங்கச்சாவடியும் மூடப்படவில்லை ?.ஒரு சாலை போட எவ்வளவு பணம் வசூல் பண்ணுவார்கள் ?.ஒரு அளவு இல்லையா ?.யாரிடம் போய் சொல்லவேண்டும் .சாமானிய மனிதனுக்கு விவரம் தெரிந்தவர்கள் விளக்கவும்


ஆரூர் ரங்
செப் 01, 2025 10:46

தேசீய நெடுஞ்சாலைகளை அமைக்கவும் சீர் செய்யவும் தேவைப்படுகிற உள்ளூர் பொருட்களை தமிழக அரசு சரியாக சப்ளை செய்வதில்லை. திட்டங்கள் தாமதமாகிறது என NHAI கூறுகிறது. ஒப்பந்ததாரர்களுக்கு நஷ்டம். அதெல்லாம் இதில்தான் முடியும்.


GMM
செப் 01, 2025 07:32

தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டணம் பராமரிக்க நிதி தேவை. இதனை குறைக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று கூச்சல் போடும் அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து சுங்க சாவடியை குத்தகை எடுத்து நடத்தலாம். அப்போது தான் கஷ்டம் தெரியும். திரும்ப தராத நன்கொடை வசூலித்து சுகம் கண்ட கட்சிகளுக்கு பணம் தேடுவது எவ்வளவு கஷ்டம் என்று புரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை