UPDATED : டிச 26, 2025 09:11 AM | ADDED : டிச 26, 2025 02:01 AM
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில், குட்டு வாங்கியும், தி.மு.க., அரசு பாடம் கற்றுக்கொள்ள முன்வரவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது, தீபத்துாண் தான் என, தொல்லியல் துறை வெளியிட்டுள்ள நுாலில் உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆனாலும், தி.மு.க.,வினர் அது தீபத்துாண் அல்ல, சர்வே கல் என, பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். இதனால் ஒரு உயிர் பறிபோய் உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகள் கொல்லப் படுகின்றன. திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டும், அடாவடியாக அதை செயல்படுத்த, தி.மு.க., அரசு மறுத்து வருகிறது. தங்களுக்கு சாதகமாக, நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினால், அது நியாயமான தீர்ப்பு, பாதகமாக தீர்ப்பு வந்தால் அநியாய தீர்ப்பு என, காலங் காலமாக தி.மு.க., கூறி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.