மூன்றாவது இருக்கைக்கு உதயநிதி முன்னேற்றம்
சென்னை : சட்டசபையில் மூன்றாவது இருக்கைக்கு உதயநிதி முன்னேறியுள்ளார். மீண்டும் அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் நாசருக்கு பழைய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.சட்டசபை நேற்று காலை, 9:30 மணிக்கு கூடியது. அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்கூட்டியே சபைக்கு வந்து அமர்ந்திருந்தனர். துணை முதல்வர் உதயநிதி, சபை துவங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் வந்தார். அமைச்சர் துரைமுருகனுக்கு வணக்கம் தெரிவித்தபடி, தன் பழைய இருக்கைக்கு சென்று அமர்வதாக கூறினார். உடனே, துரைமுருகன் தன் இருக்கைக்கு அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி, அங்கே அழைத்தார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்துள்ள மூன்றாவது இருக்கையில், உதயநிதி அமர்ந்தார். அதுவரை அந்த இருக்கையில் அமர்ந்திருந்த நேரு, நான்காவது இருக்கையில் அமர்ந்தார். அப்போது, அமைச்சர் வேலு எழுந்து சென்று, உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். பின், சட்டசபை கட்சிகளின் தலைவர்களும், எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து வந்து, உதயநிதிக்கு வாழ்த்து கூறினர். மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள செந்தில் பாலாஜி, நாசர் ஆகியோருக்கு, அவர்கள் ஏற்கனவே அமர்ந்திருந்த இருக்கைகளே ஒதுக்கப்பட்டு உள்ளன.