மேலும் செய்திகள்
தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
10 hour(s) ago | 14
சென்னை: 'மாணவர்கள் மனநலம் சார்ந்த கருத்து கணிப்புக்கு, கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது. ஆந்திராவில் விடுதியில் தங்கி, 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ஒருவர், கடந்த 2023ல் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க, 15 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, 'தேசிய பணிக்குழு' எனும் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. இதற்கான இணையதளத்தில், மாணவர்கள் மனநலம் குறித்து பேராசிரி யர்கள், பெற்றோர் ஆகியோ ரிடம் கருத்து கணிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், கருத்து கணிப்பு நடவடிக்கையில், கல்வி நிறுவனங்கள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருப்பதாக யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, பல்கலை துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு, யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: மாணவர்கள் மனநலம் சார்ந்த கருத்து கணிப்பில் பங்கேற்க உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், 32 மத்திய பல்கலைகள், 23 ஐ.ஐ.டி.,க்கள், 22 என்.ஐ.டி.,க்கள், ஏழு ஐ.ஐ.ஐ.டி.,க்கள், 13 ஐ.ஐ.எம்.,கள், ஐந்து ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனங்கள் மட்டும் கருத்து கணிப்பு விபரங்களை சமர்ப்பித்துள்ளன. இதற்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 'அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம். கருத்து கணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 'இல்லையேல், நடவடிக்கை எடுக்கும் வகையில் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும்' என, உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த கடுமையான எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, அனைத் து உயர் கல்வி நிறுவனங்களும், மாணவர்களின் மனநலம் சார்ந்த கருத்து கணிப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10 hour(s) ago | 14