காமராஜர் குறித்து அவதுாறு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சென்னை: 'காமராஜர் குறித்த அவதுாறு வீடியோ பதிவை நீக்க கோரியும், அதை பதிவிட்டவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும், மத்திய அமைச்சர் முருகனிடம், பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கரு. நாகராஜன் ஆகியோர், நேற்று டில்லியில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த நவ., 29ம் தேதி, 'மை இந்தியா யு டியூப் சேனலில்' 'கர்மவீரர் காமராஜரும், கருணாநிதியும் சொல்ல மறந்த கதைகள் - பகீர் கிளப்பும் கிறிஸ்துவ பாதிரியார்' என்ற வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், சேனலின் ஆசிரியர் முக்தார் அகமது, 'காமராஜர் காலத்தில் தான், அதிக ஊழல் இருந்தது. அவர், தனது நாடார் சமூகத்திற்கு மட்டுமே அதிகம் உதவினார். அவரது ஆதரவில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன' என, வேறொருவர் குற்றச்சாட்டுகள் வைத்ததாகக் கூறி, பல்வேறு அவதுாறுகளை காமராஜர் மீது சுமத்தியுள்ளார். இந்த வீடியோவை நீக்குவதுடன், 'மை இந்தியா' சேனல் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.