உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீரப்பன் பாணியில் யானை வேட்டை, மரம் கடத்தல் தர்மபுரி வனப்பகுதியில் ஜரூர்

வீரப்பன் பாணியில் யானை வேட்டை, மரம் கடத்தல் தர்மபுரி வனப்பகுதியில் ஜரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி:சந்தன மர கடத்தல் வீரப்பன் என்கவுன்டருக்கு பின் அடங்கியிருந்த யானைகள் வேட்டை, மரங்கள் வெட்டி கடத்துவது போன்ற சமூக விரோத செயல்கள், மீண்டும் தலையெடுத்து முழுவீச்சில் நடந்து வருகின்றன.தர்மபுரி மாவட்ட வனப்பகுதி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மற்றும் கர்நாடக, கேரள மாநிலங்களின் வனப்பகுதிகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. மாவட்டத்தில், 1.64 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இதில், 136 காப்புக்காடுகள், 18 காப்பு நிலங்கள் உள்ளன. தர்மபுரி மாவட்டம், தமிழகத்தின் மிகப்பெரிய வன கோட்டமாக உள்ளது. காவிரி, சனத்குமார் நதி, வாணியாறு, தென்பெண்ணையாறு, சின்னாறு உள்ளிட்ட நீர்நிலைகளின் எல்லைகளையும் தொடுகிறது.

அரிய வகை மரங்கள்

மாவட்டத்தில் தர்மபுரி, ஒகேனக்கல், பாலக்கோடு, பென்னாகரம், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர், கோட்டப்பட்டி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு, நுாற்றுக்கணக்கான யானைகள் உட்பட பல்வேறு விலங்குகள் மற்றும் அரியவகை மரங்கள் ஏராளமாக இருந்தன.இங்கு, பல ஆண்டுகளாக தந்தங்களுக்காக யானைகளை கொல்வது, சந்தன மரங்களை வெட்டி கடத்துவது அதிகமாக நடந்தது. இதனால் வனப்பகுதி அடர்த்தி குறைந்தது. சந்தன மர கடத்தல் வீரப்பன் கடந்த, 2004ல் சுட்டுக் கொல்லப்பட்ட பின், யானை வேட்டை, மரக்கடத்தல் பெருமளவில் குறைந்திருந்தது.தற்போது யானை வேட்டையும், மரக்கடத்தலும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வேட்டையாடப்படும் யானைகள், வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்படுகின்றன.வேட்டை ஒருபுறம் இருக்க, மர்மமான இறப்பு, மின்சாரம் பாய்ந்து பலியாவதும் தொடர்கிறது. 2023 மார்ச்சில், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளியில் உணவு தேடிச் சென்ற இரண்டு பெண் யானைகள், ஒரு மக்னா யானை இறந்தன.கம்பைநல்லுார் அருகே மின்கம்பியில் உரசிய ஒரு யானை பலியானது. அதேபோல் ஏப்., 3ல் பென்னாகரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னாற்று படுகையில், 15 வயது பெண் யானை, ஒகேனக்கல் வனச்சரகம் கோடுப்பட்டியில் ஒரு ஆண் யானை என, அடுத்தடுத்து ஆறு யானைகள் இறந்தன.

உள்ளூர் மக்கள் புகார்

தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் கடந்தாண்டு ஆய்வில், 144 யானைகள் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த, மார்ச், 1ல் பென்னாகரம் அருகே, ஏமனுார் வனப்பகுதியில் ஒரு ஆண் யானை வேட்டையாடப்பட்டு, தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். விசாரணையில், யானை வேட்டையில் ஈடுபட்ட கொங்கரப்பட்டி செந்தில், 28, தினேஷ், கோவிந்தராஜ், விஜயகுமார் உட்பட ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.வனத்தை ஒட்டிய கிராமங்களிலிருந்து வருவோர், வனத்திற்குள் மரங்களை வெட்டி கடத்திச் செல்வதாகவும், அரூர் வனச்சரகத்தில் மான் வேட்டைக்கு சுற்றும் கும்பலும், மரம் வெட்டும் கும்பலும் அதிகரித்துள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதை தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என, புகாரும் எழுந்துள்ளது.வனப்பகுதியில் மரக்கடத்தல், யானை வேட்டை மீண்டும் தலைதுாக்கியுள்ளதாகவும், விபரீத சம்பவங்கள் நடப்பதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாலும், நடவடிக்கை இல்லை என்பதே பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

'ஏஐ' கேமராக்கள் பொருத்தம்

தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறியதாவது:வனப்பகுதிக்குள் புகுந்து யாரும் மரம் வெட்ட முடியாது. யானை வேட்டை வழக்கில் ஐவரை பிடித்து விட்டோம். ஒருவர் மட்டுமே பிடிபடவில்லை. வனப்பகுதியில், விலங்குகள், ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க பாலக்கோடு வனச்சரகத்தில், 'ஏஐ' தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒகேனக்கல் வனச்சரகத்தில் கேமராக்கள் அமைக்க ஆய்வு நடக்கிறது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க சோலார் மின்வேலி மற்றும் கசிவுநீர் குட்டை, தொட்டிகள் அமைத்து தண்ணீர் ஊற்றப்படுகிறது. வேட்டையில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
மே 18, 2025 06:56

மாடல் என்றால் சும்மாவா...


Mani . V
மே 18, 2025 04:25

வீரப்பன் இருக்கும் பொழுதே இதைச் செய்தவர்கள் அரசியல்வியாதிகள் ஸாரி அரசியல்வாதிகள். அதற்குத்தான் வீரப்பன் அவசர அவசரமாக என்கவுண்டர் செய்யப்பட்டார். இப்பொழுது கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் இந்த அயோக்கியர்கள் இந்த வேலையை ஆரம்பித்துள்ளார்கள். இந்த சமூக விரோத சக்திகளை கண்டது சுட்டுத் தள்ள வேண்டும்.


முக்கிய வீடியோ