சென்னை: 'வாகன புதுப்பிப்பு கட்டண உயர்வை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முருகன் வெங்கடாசலம் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில், மோட்டார் தொழில் முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த தொழில் நலிவடைந்து விட்டது. உதிரி பாகங்கள், டீசல், ஆயில் மற்றும் வரிகள் உயர்ந்து விட்டன. ஆனால், நாங்கள் பெறும் வாடகையோ, குறைவானதாக உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு, பழைய வாகனங்கள் புதுப்பிப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. குறிப்பாக, கனரக வாகனங்களுக்கான கட்டணம், 850 ரூபாயில் இருந்து, 17,110 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுஉள்ளது. வாகனங்களுக்கு ஏற்றார்போல், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது, லாரி உரிமையாளர்கள், மோட்டார் தொழிலை நம்பி உள்ளோரிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மத்திய அரசு, இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதேபோல், தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் 20 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் காலாவதியான, 25க்கும் அதிகமான, சுங்கச்சாவடிகளை படிப்படியாக நீக்க வேண்டும். தமிழக போக்குவரத்து துறையில், பிரதிபலிப்பு ஸ்டிக்கர், வேகக் கட்டுப்பாட்டு கருவி, உரிமம் பெறுதல், உரிமம் புதுப்பிப்பு போன்ற ஒவ்வொரு செயல்களுக்கும், இடைத்தரகர்களால் முறைகேடாக லஞ்சம் பெறப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.