சென்னை: தாம்பரம் இரும்புலியூரில், இரண்டு வீடுகளில் மட்டும், 510 ஓட்டுக்கள் இருப்பதாக, அ.தி.மு.க., குற்றம்சாட்டிய நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். 'அங்கு, 54 பேர் மட்டுமே உள்ளனர்; மற்றவர்களின் ஓட்டுக்கள் ரத்து செய்யப்படும்' என, அவர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. தென்சென்னையில் பல்லாவரம், தாம்பரம் தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 'தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட இரும்புலியூர் காயத்ரி நகர், 3வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் 360 ஓட்டுகள்; ரோஜா தோட்டம், இரண்டாவது தெரு, 1ம் எண் வீட்டில், 150 ஓட்டுகள் உள்ளன. இரு வீடுகளில், 510 ஓட்டுகள் எப்படி சாத்தியம்' என, அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார்.இதையடுத்து, தேர்தல் அலுவலர்கள் இந்த வீடுகளில் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது, காயத்ரி நகர், மூன்றாவது தெருவில் உள்ள வீட்டில் தற்போது, 60 வாக்காளர்களும், ரோஜா தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில், 40 வாக்காளர்களும் இருப்பது தெரிய வந்தது. மேலும், வெளியூர்களில் இருந்து சர்ச்சிற்கு வந்து போகிறவர்கள் எல்லாம், இரு வீட்டு முகவரி கொடுத்து வாக்காளர்களானது அம்பலமானது.இது குறித்து, தாம்பரம் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் கூறியதாவது: ரோஜா தோட்டம் என்ற பகுதியில், சர்ச் ஒன்று உள்ளது. அதில், 697 ஓட்டுகள் உள்ளன. ஒரே தெருவில் மட்டும், 400க்கும் அதிகமான ஓட்டுகள் உள்ளன. அவர்களில், 54 பேருக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற வாக்காளர்கள் அங்கு இல்லை என்பது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர்., படிவம் ஒப்படைக்க மறுப்பதாக போலீசில் புகார்
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் மேட்டுப்பாளையம் கிராமத்தில், கொள்ளாபுரி அம்மன் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு என, இரண்டு தெருக்கள் உள்ளன. கொள்ளாபுரி அம்மன் கோவில் தெரு, சென்றாயன்பாளையம் ஊராட்சியிலும், விநாயகர் கோவில் தெரு, தோமூர் ஊராட்சியிலும் வருகிறது. ஒரே கிராமத்தில் உள்ள தெருக்கள், இரு வேறு ஊராட்சியில் வருவதால், அப்பகுதியினர் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கான எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பூர்த்திசெய்து, வி.ஏ.ஓ.,விடம் ஒப்படைக்க அப்பகுதியினர் மறுத்ததால், வருவாய் துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தெருமக்கள் கூறியதாவது: ஒரே கிராமம், இரண்டு ஊராட்சியில் வருவதால், வருவாய் துறையில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் உள்ளது. காவல் நிலையத்தை தொடர்பு கொண்டால் கனகம்மாசத்திரம் மற்றும் பென்னாலுார்பேட்டை போலீசார், எங்கள் எல்லையில் வரவில்லை என்கின்றனர். ஊராட்சி அலுவலகம் மற்றும் ஓட்டுச்சாவடி மையம் உள்ளிட்டவை மாறுபடுகிறது. அடிப்படை வசதிகளை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எங்கள் குறைகளை தீர்த்தால்தான் எஸ்.ஐ.ஆர்., படிவத்தை, வருவாய் துறையினரிடம் ஒப்படைப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.