திருச்சி: திருச்சி மாவட்டம், முத்துக்குளம் அருகே உள்ள தேசிய சட்டப்பள்ளியில், கடந்த 6ம் தேதி, இளங்கலை, ஐந்தாம் ஆண்டு மாணவர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சட்டப்பள்ளி விடுதியின், 2வது மாடியில் மது பார்ட்டி நடந்துள்ளது. அப்போது, ஐந்தாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவர்கள் போதையில், தங்களின் சிறுநீரை மதுவில் கலந்து, பார்ட்டியில் பங்கேற்ற மற்றொரு மாணவருக்கு கொடுத்துள்ளனர்.அதைக்குடித்த மாணவர், சற்று நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். அடுத்த நாள், மற்றொரு மாணவர் வாயிலாக தனக்கு நண்பர்கள் சிறுநீர் குடிக்க கொடுத்ததை தெரிந்து கொண்ட மாணவர், குடும்பத்தாரிடம் தெரிவித்தார். அவர்கள், சட்டப்பள்ளி பதிவாளர் பாலகிருஷ்ணனிடம், 10ம் தேதி புகார் அளித்தனர். விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. அவர்கள், மூன்று மாணவர்களிடமும் எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் வாக்குமூலம் வாங்கி, வீடியோ பதிவு செய்தனர். இந்த குழு, வரும் 18ம் தேதி, கல்லுாரி நிர்வாகத்திடம் அறிக்கை அளிக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பாதிக்கப்பட்ட மாணவர், தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி உள்ளார். அவர் மிரட்டல் காரணமாக புகாரை வாபஸ் பெற்றாரா என, மாணவர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த சம்பவம் பட்டியலின சமுதாயத்துக்கு எதிராக நடந்தது என சித்தரிக்க சிலர் முயற்சித்துள்ளனர்.ஆனால், இவ்விவகாரத்தில் சிக்கியுள்ள ஒரு மாணவரும் அதே சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அதற்கு வாய்ப்பில்லை என, தேசிய சட்டப்பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.திருச்சி தேசிய சட்டப்பள்ளி ராம்ஜி நகர் அருகே அமைந்துள்ளதால், போலீசார் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும், அவர்கள் கண்ணில் மண்ணை துாவி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அங்கு ஜோராக நடக்கிறது. சட்டப்பள்ளி சம்பவம் கூட, கஞ்சா புகைத்ததால் நடந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 10 பேரிடம் விசாரணை நடக்கிறது.