மேலும் செய்திகள்
ரவுடிகளில் நாலு வகை; அன்பில் செப்பேடு மாயமான கதை
17-Dec-2024
திண்டிவனம்:''திராவிட மாடல் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்ற-ன. எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க., படுதோல்வியடையும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.தைலாபுரத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழக காவல்துறை முடங்கியுள்ளது. தமிழக காவல்துயைின் கை, கால்கள் கட்டப்பட்டு உள்ளதால், எப்படி ஓடுவர். தமிழகத்தில் பல வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். சயனைடு கலந்து மதுவை குடித்ததால், இறப்பு ஏற்பட்டது என்று தெரிந்தது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை பிடிக்கவில்லை.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் கடந்த மே 4ம் தேதி கொலை செய்யப்பட்டார். ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை கொலையாளிகளை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், குற்றவாளிகளை பிடிக்கவில்லை.சமீபத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள திம்மபுரத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கிலும், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழக காவல்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது.சந்து கடையை மூட போராட்டம் தமிழகத்தில் மொத்தம், 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு அருகில் 4 அல்லது 5 சந்து மதுக்கடைகள், 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. சந்து கடைகளை மூட வேண்டும். இல்லையென்றால் பா.ம.க., சார்பில் சந்துகடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.தமிழகத்தில் தற்போது மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த போதை மருந்தை வீடுகளில் ஆய்வகம் அமைத்து தயாரிக்கின்றனர்.சில நாட்களுக்கு முன் சென்னை மாதவரத்தில், 16 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது. இந்த போதை பொருள் அருப்புக்கோட்டையிலுள்ள ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் தி.மு.க., அரசு தோல்வியடைந்துவிட்டது. அதை மக்கள் அறிந்து கொண்டால், வரும் தேர்தலில் தி.மு.க,.வை மக்கள் படுதோல்வி அடைய செய்வர் என்பதால், எதிர்கட்சிகளை அடக்குகின்றனர்.திராவிட மாடல் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. எப்போது தேர்தல் நடந்தாலும், தி.மு.க., படுதோல்வியடையும். பங்களிப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன், கிராமப்புற உள்ளாட்சிகளை தமிழக அரசு இணைக்கக் கூடாது. இவ்வாறு இணைத்தால் கிராமப்புறங்களில் சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துவிடும்.பா.ம.க., தலைவர் அன்புமணிக்கும் எனக்கும், எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. பா.ம.க., மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன், அந்த பொறுப்பில் நீடிக்கிறார்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
ராமதாஸ் மேலும் கூறியதாவது:தி.மு.க., உடன் பா.ம.க., கூட்டணி இருந்தபோது, கருணநிதியிடம், 'ராமதாஸ் உங்களை பற்றி விமர்சனம் செய்கிறாரே' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு கருணாநிதி, 'தலைவலிக்கு தைலாபுரத்திலிருந்து தைலம் வந்திருக்கிறது' என, கருணாநிதி என்னை பற்றி நாகரிகமாக, நளினமாக கூறினார். சென்னையில் நடந்த சர்வகட்சி கூட்டத்தில், நான் தான் கருணாநிதியிடம், 'உங்களால் அதிக பாரம் சுமக்க முடியாது; ஸ்டாலினை துணை முதல்வராக்குங்கள்' என்று கூறினேன். அவரும் ஸ்டாலினை துணை முதல்வராக்கினார்.தி.மு.க., உடன் கூட்டணி இல்லாமல், அ.தி.மு.க., உடன் கூட்டணி வைத்திருந்த போது, ஜெ.,வால் கருணாநிதி கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நான் அவரை சிறையில் சந்திக்க சென்றபோது, என்னை சிறைக்குள் செல்ல அனுமதிக்க வில்லை. உடனே நான் காரில் கொண்டு வந்த நாற்காலியை போட்டு, உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று கூறிய பின், அனுமதித்தனர். நான் உள்ளே சென்ற உடன் கருணாநிதி என்னை பார்த்து, 'உங்களால் தான் நான் சிறையில் இருக்கிறேன்' என்று கூறினார்.இதற்கு காரணம், நான் தி.மு.க., உடன் கூட்டணி வைக்காமல், அ.தி.மு.க., உடன் கூட்டணி வைத்ததால் தான், அவர் கைது செய்யப்பட்டார் என்ற அர்த்தத்தில் கருணாநிதி கூறினார். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மறைந்த முதல்வர் கருணாநிதியை பற்றி நினைவுகூர்ந்தார்.
17-Dec-2024