| ADDED : மார் 14, 2024 11:52 PM
மதுரை : ''மத்திய அரசு ஏதோ ஒரு காரணத்திற்காக லோக்சபா தேர்தலை தள்ளி வைத்துக்கொண்டே செல்கிறது'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சந்தேகம் தெரிவித்தார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி குறைகள் குறித்து ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என பழனிசாமி கூறி இருக்கிறார். ஆதாரமில்லாத விவகாரங்களை பேசக்கூடாது என உத்தரவு போட்டு இருக்கிறார். தேவையில்லாமல் அரசை குறை கூறக்கூடாது என எங்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. அப்படி அறிவுரை கூறியவர் எப்படி தேவையில்லாமல் போதை பொருள் கடத்தலில் முதல்வரை தொடர்புபடுத்தி பேசி இருப்பார்.முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஜாபர் சாதிக்குடன் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டதற்கு முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆளுங்கட்சி குற்றம் குறைகளை சுட்டிக் காட்டவே எதிர்க்கட்சி உள்ளது. 'இண்டியா' கூட்டணி, ஆட்சியில் அமர வேண்டுமென ஓட்டு சேகரித்துக் கொண்டிருக்கும் முதல்வர், கர்நாடகா அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது எனக் கூறியதற்கு பதில் கூற வேண்டும்.கருத்துக் கணிப்புகள் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வெளியிடப்படுகிறது. தேர்தல் அறிவிக்காத நிலையில் கருத்துக்கணிப்புகளை எப்படி ஏற்க முடியும். மத்திய அரசு வேண்டுமென்றே ஏதோ ஒரு காரணத்திற்காக லோக்சபா தேர்தலை தள்ளி வைத்துக்கொண்டு செல்கிறது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருவது பத்தோடு பதினொன்றாக பார்க்க வேண்டும். தேர்தலுக்காக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து புகழ்ந்து பேசுகிறார். முதலில் அண்ணாமலையிடம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து மோடி பேச வேண்டும். இவ்வாறு கூறினார்.