சென்னை: கோவில் நிலங்களை மீட்பதில் காலதாமதம் செய்தது தொடர்பான நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் , அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்துார் மாவட்டம், பேராம்பட்டு கிராமத்தில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடவடிக்கை வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கோவிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் ஆறு மாதத்திற்குள் மீட்க வேண்டும்; அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும்' என, 2023 செப்., 20ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி, அறநிலையத்துறை கமிஷனர், அறநிலையத்துறை வேலுார் இணை கமிஷனர், அறநிலையத்துறை திருப்பத்துார் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது, எஸ்.நடராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, நீண்ட காலத்துக்கு பின்னரே, அறநிலையத்துறை தரப்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கூட்டு ஆய்வு மேற்கொள்ளும் வரை, அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர் என்பது, அவர்கள் தாக்கல் செய்த மனு வாயிலாக தெரிகிறது. ஏனெனில், நீதிமன்ற உத்தரவை ஆறு மாதங்களில் அமல்படுத்தாதது குறித்து, எந்த விளக்கத்தையும் மனுவில் தெரிவிக்கவில்லை. மேலும், மீட்கப்பட்ட நிலங்களை, கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்வதில், திருப்பத்துார் தாசில்தார் காலதாமதம் செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவு என தெரிந்தும், ஓராண்டுக்கும் மேலாக தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை இந்த நடவடிக்கை நிறைவு பெறவில்லை. எனவே, தாசில்தார் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, வழக்கில் தாசில்தாரையும் சேர்க்குமாறு உத்தரவிடப்படுகிறது. தற்போது உள்ள தாசில்தாருக்கு, அரசு வக்கீல் இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். தாசில்தார் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் ஒரு வாய்ப்பு கள ஆய்வு ஏன் ஆறு மாதங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து, கூடுதல் மனு தாக்கல் செய்ய, அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. இந்த வழக்கில் மூன்று பேரும் நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராவதற்கு மூன்று நாட்களுக்கு முன், விளக்க மனுவை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை ஜன., 12ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.